
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை போயஸ் கார்டனில் நடந்தது. அப்போது ஒ.பி.எஸ்., தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக, அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.
மேலும், ச்சிகலாவை முதலமைச்சராகவும் தீர்மானம் நிறைவேற்றினர். இதை தொடர்ந்து வரும் 7 அல்லது 9ம் தேதி சசிகலா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வரை நீக்கிவிட்டு, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க எடுக்க அவசரம் என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றக்குழு தலைவராக சசிகலாவை, அவசரமாக அதிமுக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலாவை எதற்காக அவசர அவசரமாக முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு தனி மனிதர் அரசியலில் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், யார் முதல்வராக வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதலமைச்சராக கொண்டு வந்தால், அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளலாம்.
நல்ல முறையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஏன் இந்த அவரச முடிவு எடுக்கவேண்டும் என கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடிகர் ஆனந்தராஜ், கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக, அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஆனந்தராஜை சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், அவர் மவுனம் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.