அப்படி என்ன அவசரம்..? உங்கள் அமைச்சர்களை கொஞ்சம் அடக்கி வையுங்கள்.. நாசுக்காக ஊசி இறக்கிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 5:12 PM IST
Highlights

இனிவரும் காலங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக நடைமுறைக்கு புறம்பாக, மாண்புமிகு அமைச்சர்கள் இது போன்று பேட்டி அளிப்பதை தவிர்க்க தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே 14-8-2021 அன்று வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுவிட்டது. இது சட்டப் பேரவை விதிகளுக்கு முரணானது. எனவே அமைச்சர்கள் இது போன்று பேட்டி அளிப்பதை தவிர்க்க தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கவேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்

பின்வருமாறு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு  208 (1) இன் படி  இயற்றப்பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, நிதி அலுவல், வினாக்கள் விடைகள், கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், பொது நடைமுறை விதிகள், மாற்று தலைவர்கள் நியமனம், பேரவை குழுக்கள் நியமனம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சட்டபூர்வமான வழிகாட்டியாக விளங்குவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181 ஒன்றின்கீழ் மேதகு ஆளுநரால் குறிப்பிடப்படும் நாளன்று நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதன்படி மேதகு ஆளுநரால் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நாள் 13-8-2021 என குறிப்பிடப்பட்டு, அதற்கான தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பு ஆகியவற்றிற்கான நாட்கள் குறிப்பிடப்பட வேண்டும், இதற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 283(1)  மற்றும் (2)  இல் வரவு செலவு திட்டம் என்பது பொது விவாதம் மற்றும் மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அலுவல் ஆய்வுக் குழுவை கலந்து ஆலோசித்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பத்து நாட்களுக்கு  மேற்படாமலும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் போதிய நாட்களை ஒதுக்க வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு ஏற்ப தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ச்சிநிரலை முடிவு செய்ய ஏதுவாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் 10-8-2021 அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள மாண்புமிகு பேரவைத்தலைவர் அறையில் நடைபெறும் என்ற தகவல் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.

ஆனால் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், 10-8-2021 அன்று நடைபெறுவதற்கு முன்பே 8-8-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று, வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை 14-8-2021 அன்று தாக்கல் செய்யப்படும் என்று மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, அது அனைத்து பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு எடுப்பதற்கு முன்பே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அது குறித்து வெளியில் செய்தி வெளியிடுவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று.

எனவே இனிவரும் காலங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக நடைமுறைக்கு புறம்பாக, மாண்புமிகு அமைச்சர்கள் இது போன்று பேட்டி அளிப்பதை தவிர்க்க தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!