ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்தது ஏன் தெரியுமா?... ஆலோசனை கூட்டம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 13, 2021, 12:41 PM IST
Highlights

ரஜினி ரசிகர்களுக்கு இருந்த மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால் தலைவர் ஏன் மக்கள் மன்றத்தை கலைத்தார் என்பது தான்

தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியலை கையில் எடுத்த ரஜினிகாந்த், கட்சி ஆரம்பித்து களம் காணும் முன்பே அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில், அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் பிரச்சனையை கிளப்பியது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரு தினங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, சென்னை வந்த இரண்டு நாட்களிலேயே அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட சாமானிய வாக்காளராக வந்து ஓட்டு போட்டார். அதன் பின்னர் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், சமீபத்தில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பினர். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த மறுநாளே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. 

அதை உறுதிபடுத்தும் விதமாக நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் சூப்பர் ஸ்டார் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும், இனி எப்போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லை என்றும் தெரிவித்தார். 

இதற்கு முன்னதாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடனான சந்திப்பில் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசியலுக்கு வருவதற்கு உறுதியாக இருந்ததாகவும், அப்படி கட்சி ஆரம்பித்தால் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது வரையிலும் முடிவு செய்து வைத்திருந்தேன் என ரஜினிகாந்த் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் கொரோனா 2வது அலை காரணமாக மருத்துவர்கள் கொடுத்த எச்சரிக்கையும், தன்னுடைய உடல் நிலையையும் கருத்தில் கொண்டே அரசியல் வேண்டாம் என முடிவெடுத்தேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ரஜினி ரசிகர்களுக்கு இருந்த மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால் தலைவர் ஏன் மக்கள் மன்றத்தை கலைத்தார் என்பது தான். அதற்கும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினி விளக்கமளித்ததாக தெரிகிறது. அதாவது மக்கள் மன்றத்தை கலைக்காமல் வைத்திருந்தால், என்றாவது நான் அரசியலுக்கு வருவேன் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் இருக்கும், அதனால் தான் மக்கள் மன்றத்தை கலைக்க முடிவெடுத்தேன் என சூப்பர் ஸ்டார் பேசியதாக கூறப்படுகிறது. 

click me!