21 கோடி பேருக்கான கேஸ் மானியம் எங்கே? அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

By Narendran SFirst Published May 22, 2022, 8:38 PM IST
Highlights

அத்தியாவசிய பொருட்களின் விலையை மத்திய மாநில அரசுகள் சேர்ந்து குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

அத்தியாவசிய பொருட்களின் விலையை மத்திய மாநில அரசுகள் சேர்ந்து குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆவடி திருமுல்லைவாயலில் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.  நேற்று பெட்ரோல் டீசல் விலை சற்று குறைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எல்பிஜி கேஸ்க்கு 200 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்தியாவில் 30 கோடி பேர் கேஸ் இணைப்பு உபயோகித்து வருகிறார்கள். அதில் 9 கோடி பேருக்கு மட்டும்தான் கேஸ் மானியம் செல்லுபடியாகும் என கூறுகிறார்கள். மீதமுள்ள 21 கோடி பேருக்கு ஏன் மானியம் கொடுக்கவில்லை? அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி இருக்கிறார்கள்.

இதை மத்திய மாநில அரசுகள் சேர்ந்து குறைக்க வேண்டும். மேலும் போதைப் பொருட்கள் உபயோகம் அதிகரித்து வருகிறது. இது ஒன்றும் திடீரென அதிகரிக்கவில்லை கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளாக கஞ்சா சகஜமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இது காவல்துறைக்கு தெரியாமல் நடக்காது காவல்துறை நினைத்தால் இரண்டே நாளில் இதை ஒழிக்க முடியும். சமீபத்தில் 4500 பேரை கைது செய்தோம் என்று கூறினார்கள் அதில் 4,000 பேர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் அப்படி விற்பனை குற்றத்தில் சிறை சென்றவர்களை குண்டர் சட்டத்தில் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும்.

முதலமைச்சர் நாள் முழுவதும் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள், டிஜிபி தலைமையில் ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஏனென்றால் இது மிகப்பெரிய பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை சீரழிந்து வருகிறது. பள்ளியில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பெரிய பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள் தாக்குதல்கள் நடக்கிறது. பள்ளியில் கொலைகள் எல்லாம் நடந்து வருகிறது. இது போன்ற கலாச்சார சீரழிவுகளும் போதைப்பழக்கம் மதுவினால் நடந்துகொண்டு வருகிறது. அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் முடியும். இதை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!