ராஜீவ் காந்தி கொலையாளியை முதல்வர் கட்டியணைத்தது நெஞ்சை பிளக்கும் செயல்.. மு.க. ஸ்டாலினை விளாசிய தள்ளிய தமாகா!

By Asianet TamilFirst Published May 22, 2022, 8:20 PM IST
Highlights

முன்னாள் பாரதப் பிரதமரின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்து அந்த விடுதலையில் மகிழ்ச்சி காணும் ஒரு கூட்டணி கட்சியோடு இன்னுமா உங்கள் கூட்டணி தொடர்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக  யுவராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்ச நீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. அதேநேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் முதல்வர் மறந்துவிட்டு அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவரை தமிழக முதல்வர் கட்டியணைத்து வரவேற்றது நெஞ்சைப் பிளக்கும் செயலாக உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அவரது நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கின்ற வேளையில், மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் சிறையில் உள்ள முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊட்டியில் இருந்தபடியே சென்னையில் உள்ள சட்ட வல்லுனர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்கள். முதல்வர் அவர்களே, ஒருபுறம் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை அனுசரித்து விட்டு அன்றைய தினமே பயங்கரவாத ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் மறுபுறம் நீங்கள் அவரைக் கொன்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஊட்டியில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?

கொலை வழக்கில் வெளியே வந்தவரை கொண்டாடுபவர்கள் தங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கொண்டாடுவார்களா? கொலைக் குற்றவாளியை தமிழக முதல்வரே கட்டி அணைத்து பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தியதின் விளைவாக தொடர்ந்து கோவை மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி அவரது விடுதலையை கொண்டாடி கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தனர். இதையெல்லாம் பார்க்கும்போது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ஒரு கொலைக் குற்றவாளிக்கு மாவட்டங்கள் தோறும் மரியாதையா? முன்னாள் பிரதமரை கொன்றவரே 31 வருடங்களில் விடுதலை ஆகலாம் என்றிருக்கும் போது, சாமானியர்களை கொன்றால்? கொலை குற்றங்கள் அதிகரிக்காதா? இனிவரும் காலங்களில் இது ஒரு முன் உதாரணமாகி விடாதா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே திமுக தயவால் கிடைக்கப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர், முன்னாள் பாரதப் பிரதமரின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்து அந்த விடுதலையில் மகிழ்ச்சி காணும் ஒரு கூட்டணி கட்சியோடு இன்னுமா உங்கள் கூட்டணி தொடர்கிறது? இதைப் பற்றிப் பேச தமாகாவிற்கு முழு தகுதி உள்ளது. காரணம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் அவரைத் தொடர்ந்து தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் தேசிய பேரியக்கத்திற்கு மிகப் பெரிய பங்கை வழங்கியுள்ளார்கள். அதேபோல் பண்டிதர் ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற இந்த தேசத்தின் உயர்ந்த தலைவர்கள் மீது என்றும் மரியாதை கொடுக்கின்ற இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகின்றது.

பதவி மோகத்திலிருக்கும் காங்கிரஸ் தலைவர்களே கூட்டணியை உதறிவிட்டு இனிவரும் காலங்களிலாவது உண்மையான காங்கிரஸ் தொண்டனின் உணர்வை புரிந்து கொள்ளவேண்டும் என்று தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்'' என்று அறிக்கையில் யுவராஜா தெரிவித்துள்ளார்.
 

click me!