மு.க. ஸ்டாலினை இனி ஆலோசனைக் குழு தலைவர் என ஏன் அழைக்கக் கூடாது..? கேட்கிறார் அர்ஜூன் சம்பத்..!

By Asianet TamilFirst Published Jun 26, 2021, 9:12 AM IST
Highlights

இனி முதல்வரை சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர்’ என அழைக்கலாம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே அழைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு பேசுகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பாஜக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியா, மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும். என்றுதான் உள்ளது. எனவே, ஒன்றியம் என்று குறிப்பிடுவதை குற்றமாக கருத வேண்டாம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம்” என்று விளக்கம் அளித்தார்.
ஆனாலும், பாஜகவும், அதன் ஆதரவு கட்சிகளும் ஒன்றிய அரசு எனக் குறிப்பிடுவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமீப காலமாக, மத்தியிலுள்ள பாஜக அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதை தவிர்த்து, ஒன்றிய அரசு என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். தொலைக்காட்சி செய்தி வாசிப்பின்போதும் சில சேனல்கள் தவிர மற்றவை ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகின்றன.


அதே போல், மு.க.ஸ்டாலினை முதல்வர் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல. அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் ஆளுநருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர்தான். இறுதி முடிவு ஆளுநரிடம்தான் உள்ளது. இதை நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 அப்படிச் சொல்கிறது. அதனால், இனி சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். ஒன்றிய அரசு சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

click me!