2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணிக்கு முயற்சி.. காங்கிரஸ் சக்தி தேவை என சரத்பவார் அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jun 25, 2021, 9:47 PM IST
Highlights

 நாடாளுமன்றத்  தேர்தலுக்கு இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோருடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் சரத்பவாரும் பிரசாந்த் கிஷோரும் இரண்டு முறை சந்தித்துபேசிவிட்டனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றையும் சரத்பவார் பிரசாந்த் கிஷோர் நடத்தி முடித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றையும் சரத்பவார் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

 
காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததால், பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை கட்டமைக்க சரத்பவார் முயல்வதாகவும்  தகவல் வெளியானது. ஆனால், இதையெல்லாம் மறுத்து சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  “எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால், உண்மையில் ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டுமெனில், காங்கிரஸை இணைப்பதன் மூலமே  செய்யமுடியும். அதுபோன்ற திடமான சக்தி தேவை. நான் அந்த கூட்டத்தில் இதைத்தான் பேசினேன்” என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். 

click me!