ஒன்றிய அரசு என திமுக அழைக்கும் விவகாரம்... தேவைப்பட்டால் வழக்குப் போடுவோம்... பாஜக ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Jun 25, 2021, 8:48 PM IST
Highlights

ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது குறித்து பாஜக சார்பில் தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே திமுகவினர் அழைக்கிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு பேசுகிறார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பாஜக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியா, மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும். என்றுதான் உள்ளது. எனவே, ஒன்றியம் என்று குறிப்பிடுவதை குற்றமாக கருத வேண்டாம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம்” என்று விளக்கம் அளித்தார்.
அதேபோல திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்களும் ஒன்றிய அரசு என்றே அழைக்கின்றனர். ஆனால், இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பாஜக ஆதரவு கட்சிகளும் ‘ஒன்றிய அரசு’ என்ற பதத்தில் அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் எல்லா கட்சி கூட்டணியிலும் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது எதோ புதிதாக கண்டுபிடித்தது போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். ஒன்றிய அரசு என்று சொல்வதால் தமிழகத்துக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? பெருமைத்தான் இருக்கிறதா ?
ஒன்றிய அரசு என்று அழைப்பதெல்லாம் மக்களை திசை திருப்பும் முயற்சி மட்டுமே. ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது தொடர்பாக பாஜக சார்பில் தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும். தமிழக நிதியமைச்சர் குழப்பமானவராக உள்ளார். கற்பனையில் பேசி வருகிறார். பெட்ரோல் மீதான வரியில் 32.90 ரூபாயை மத்திய அரசு எடுத்து கொள்வதாக அப்பட்டமான பொய்யை நிதியமைச்சர் கூறுகிறார்.” என்று கரு. நாகராஜன் தெரிவித்தார். 

click me!