
டிவிட்டர் வழியே தன் கரங்களால் கருத்துக் களம் கண்டு வந்த கமல், முதல் முறையாக களத்தில் கால் பதித்து நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எண்ணூர் துறைமுகக் கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீரென ஆதரவாளர்கள் ஓரிருவருடன் வந்து பார்வையிட்டார் கமல்.
அங்கே கள நிலவரத்தை அறிந்து, அப்பகுதி மக்கள் சிலருடன் உரையாடி அவர்களின் சிரமங்களைக் கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலகப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை டிவிட்டரில் பதிவு செய்த மறுநாளே நேரில் வந்து பார்வையிட்டு ஆச்சரியப் படுத்தினார். இதுதான் மேலோட்டமாக இன்று ஊடகங்களில் வெளித் தெரியும் செய்தி. ஆனால், கமலின் இந்த திடீர் கள ஆய்வின் பின்னணி என்ன? பலரின் மனத்திலும் உள்ள கேள்வி இதுதான்!
கொசஸ்தலை ஆற்றின் படுகை என்றும், எண்ணூர் துறைமுக கழிமுகம் என்றும், அரசை குறை கூறுவதை விட முன்னதாகவே களம் இறங்க ஒரு வாய்ப்பு, வருமுன் காப்போன் என்றெல்லாம் கூறி சுற்றுச்சூழல் குறித்த விழிப்பை ஏற்படுத்துவது போல் திடீரென ஒரு அறிக்கையை டிவிட்டரில் வெளியிட்டார் நடிகர் கமலஹாசன். ஆனால், அதில் வல்லூர் அனல் மின் நிலையமும் சாம்பல் கழிவும் என்றும் கூறி ஒரு சில வார்த்தைகளை அவர் பிரயோகித்திருந்த விதம்தான் சமூக ஆர்வலர்கள் சிலரை யோசிக்க வைத்துள்ளது.
இதுவரை, நீட், நிலவேம்பு, டெங்கு என்றெல்லாம் ஊடகங்களில் வெளியான பொதுவான சமூக விஷயங்களை தன் பங்குக்கு எடுத்துக் கொண்டு விமர்சித்து வந்த கமல், திடீரென ஒரு பகுதியை மையமிட்டு இவ்வாறு கூறிய மர்மம் என்ன? சென்ற வருடம் மட்டுமல்ல, வழக்கமாக டிசம்பர் மாதம் என்றாலே புயலும் மழையும் வந்து சென்னையை ஒரு வழியாக்கி விடுவது வாடிக்கையாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் கொள்ளாமல் திறந்து விட்டதில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எத்தனையோ ஏரிகள் திடீரென நிரம்பின. அந்த ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியிருந்த பலரும் வீடுகள் மூழ்கியதில், தங்கள் விலை உயர்ந்த உடைமைகளை இழந்தார்கள். பலரும் கீழ்த் தளத்தில் குடியிருக்கவே அஞ்சினார்கள்.
இந்நிலையில், ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியிருந்தால் அவை உடனே அப்புறப் படுத்தப் படும் என்று அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரிக்கை விட்டதுடன், உடனே களத்தில் இறங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கவனம் செலுத்தினார். ஆனால் ஆக்கிரமிப்புகள் மட்டும் சென்றபாடில்லை. காரணம், பெரும்பாலானவை அரசியல்வாதிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான்.
மேலும் அரசியல் சார்பு பெரு முதலாளிகளின் கல்வி நிலையங்கள் இந்த ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகள் காரணத்தால், இந்தப் பணிகளும் தள்ளிப் போயின. இதோ... மழைக்காலம் வந்துவிட்டது. அதன் முன்னோட்டமாக ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் சரிசெய்யப் பட்டிருக்க வேண்டும், கால்வாய்களின் அடைப்புகள் நீக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியான எந்த முன்னேற்பாடும் இல்லைதான்!
இந்த சூழ்நிலையில் கமல் ஹாசனின் திடீர் வரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பெரும் கவனம் பெற்றுள்ளது. ஆனால், சைதாப்பேட்டையை மூழ்கடித்த அடையாறு ஆற்று ஆக்கிரமிப்புகளும், கூவத்தின் கரையோர ஆக்கிரமிப்புகளும் கமலின் கவனத்துக்கு வந்து பேசியிருந்தால், அது அரசியல் ஆக்கப் பட்டு எதிர்ப்புகள் வந்திருக்கும். ஆனால் இதை எல்லாம் விட்டு, திடீரென எண்ணூர் பக்கம் எண்ணம் போனது எப்படி? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
சனிக்கிழமை இன்று காலை, எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் பார்வையிட்டு, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கமல்ஹாசன் பொதுமக்களிடம் கேட்டார். கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் புகார் தெரவித்ததுடன், நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், பருவமழை துவங்கியுள்ள நிலையில் எண்ணூர், கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வட சென்னை வெள்ளக்காடாகும் என்று நேற்று எச்சரித்திருந்தார்.
அரசியல் பயணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கமல், டுவிட்டரில் அறிக்கையாகவும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியாகவும் கொடுத்து வந்த நிலையில், இப்போது நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இனி அடுத்தடுத்து இது போன்று பல பிரச்னைகளை கமல் கையிலெடுத்து ஆய்வு மேற்கொள்வார் என கமலுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
கமலின் இந்த திடீர் அரசியலுக்கு பதிலளிக்கும் விதமாக, திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி, எண்ணுார் துறைமுகப் பகுதியில், 200 இடங்கள் வெள்ள பாதிப்பு இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு இருந்தால் அவை அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். அதற்கு உடனே ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து இன்று ஒரு டிவீட்டும் செய்துவிட்டு சமூகக் கடமை ஆற்றிவிட்டார் கமல்.
இப்போதுதான், கமலுடன் யார் சென்றார்கள், என்ன பேசினார்கள், அவருக்கு என்ன விளக்கப்பட்டது என்றெல்லாம் பார்த்தால், பின்னணியில் இயங்குவது ஏதோ ஒரு என்.ஜி.ஓ என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்கள் ஒரு தரப்பினர். கமலுடன் சென்று, அவருக்கு இந்த பாதிப்புகள் குறித்து விளக்கிய நபர், ஒரு வாரம் முன் தனது பேஸ்புக் பக்கத்தில், அறப்போர் இயக்கம் சார்பிலான மனித சங்கிலிப் போராட்டம், அரசு அபகரிக்கும் சதுப்பு நிலம் 1000 ஏக்கர் என்று போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.
இதனிடையே, கமல் மேற்கொண்ட செயல் நல்ல நோக்கம் தான் என்றாலும், பின்னணியில் செயல்படும் நபர்களால் இது அரசியல் ரிதியில் சர்ச்சைக்குரியதாக மாறும் என்கின்றனர் ஒரு தரப்பினர்.
இது முழுக்க முழுக்க, என்.ஜி.ஓ.க்கள் செய்யும் சதி என்றும், கமல் இப்போது அரசியல் ஆசையுடன் ஓர் உத்வேகம் காட்டி வருவதால், அவரைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயர்களில் அவர்களால் மேற்கொள்ளப்படும் சதி என்கின்றனர். இதற்கு கமல் பலியாடு ஆகப் போகிறார் என்று எச்சரிக்கும் சிலர், இது மெரீனாவில் மக்களைத் திரட்டிய போன்றதொரு பின்னணியுடன் துவங்கப் போகும் மற்றுமொரு கலவரத்துக்கான வித்து என்கின்றனர்.
பொதுவாக, காலனியாதிக்கம் உலகமெங்கும் கடற்கரையோரத்தில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டுப் பகுதிகளுக்கு பரப்பப்படும். எல்லைப் பகுதி எங்கும் தமக்கு சாதகமானவர்களையோ, சாதகமாக செயல்படும் விதமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களோ குடியேற்றப்படுவர். இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. அப்படியே புதிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள், போன்றவற்றை எதிர்ப்பவர்கள், இணையம், கூடங்குளம், போல எண்ணூர் - துறைமுகத்துக்கு இடும் அச்சாரம் இது... கமலை வைத்துச் செய்யும் ஒரு மிகப் பெரிய திட்டமிடலின் முன்னேற்பாடு இது என்கின்றனர்.
பேரிடர் மீட்புக் குழு, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆகியவை, மேலும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும். அடையாறு, கூவம், பள்ளிக்கரணை, கொசஸ்தலை ஆற்றைக் காக்க வேண்டும். சென்னையை காக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த அமைப்பின் கொள்கைகள் முன்னிறுத்தப் படுகின்றன.
இவற்றை எல்லாம் பார்த்தால், நோக்கம் சரியானதாக இருந்தாலும், செயல்திட்டங்களைக் காணும் போது, கமல் அடுத்த ஒரு கலவரத்தைத் தூண்ட தூண்டுகோலாக இருக்காமல், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது.