
டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
40 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆட்சி அமைக்க தேவை எனும் பட்சத்தில் குடிசைக்குள் சென்று சோறு சாப்பிட்டார்கள்.
தற்போதைய அரசு மோடியின் கையில் உள்ள கண்ணாடி பாத்திரமாக உள்ளது.
அனைத்து தரப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக டெல்லி அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது எனவும், தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.