எடப்பாடியை அசைக்க முடியவில்லை! ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியை தூக்கி பிடிக்கும் பின்னணி!

By Selva KathirFirst Published Dec 18, 2020, 11:13 AM IST
Highlights

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஆடிட்டர் குருமூர்த்திக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமியை தற்போது ரஜினி மூலமாக வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். ஆனால் சசிகலா முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தான் ஓ.பிஎஸ்.சுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தர்மயுத்தத்திற்கு அவரை தயார் செய்வதர் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்று அப்போதே பேச்சுகள் அடிபட்டனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பதை ஓபிஎஸ் தரப்பால் தடுக்க முடியவில்லை.

இருந்தாலும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து அகற்றும் வியூகமாக ஓபிஎஸ்சை எடப்பாடியுடன் இணைக்கும் வியூகத்தை வகுத்துக் கொடுத்தவரும் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்று அப்போது தகவல்கள் உலா வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் சிலர் ஓபிஎஸ் – இபிஎஸ் அணி இணைவதற்கு முன்னதாக ஆடிட்டர் குருமூர்த்தியை வீடு தேடிச் சென்று சந்தித்து திரும்பினர். இதன் பிறகு அதிமுக ஒன்றாகி சசிகலா, டிடிவி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

இப்படி அதிமுக ஒன்றான பிறகு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனது பணிகளை கவனித்து வந்தார். ஓபிஎஸ் போல ஆடிட்டர் குருமூர்த்தியின் அஜெண்டாக்களை ஏற்க மறுத்ததாக சொல்கிறார்கள். இதனால் அப்போது முதலே எடப்பாடிக்கு எதிராக குருமூர்த்தி வியூகம் வகுக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் – இபிஎஸ் மூலம் தமிழகத்தில் தனது அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நம்பியிருந்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுகளை எடப்பாடி தரப்பு காது கொடுத்து கூட கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் எடப்பாடி பழனிசாமி அரசு ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கணக்கு போட்டவர்களில் ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவர். ஆனால் அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கி அரசை முழுமையான காலத்திற்கும் தற்போது எடப்பாடி பழனிசாமி வழிநடத்தியுள்ளார். அதோடு ஓபிஎஸ் போல அரசியல் ஆலோசனைகள், அரசு தொடர்பான ஆலோசனைகளை எடப்பாடி ஆடிட்டரிடம் சென்று கேட்பதில்லை. கொங்கு மண்டலத்தின் சேலம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சாதாரண விவசாயியாக அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது இந்திய அளவில் முதன்மையாக உள்ள மாநில முதலமைச்சராக எடப்பாடி திகழ்ந்து வருகிறார்.

மேலும் சிறப்பான நிர்வாகம் என்று இந்தியா டுடே எடப்பாடி அரசை பாராட்டுகிறது. சுகாதாரத்துறையில் இருந்து போக்குவரத்து துறை வரை மத்திய அரசால் விருது கொடுத்து கவுரவிக்கப்படுகிறது. தவிர கொரோனவை தமிழக அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி எடப்பாடியை நேரடியாக பாராட்டுகிறார். மேலும் சிறப்பான அரசு நடைபெறுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்தை பாராட்டுகிறார். ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தி எடப்பாடி அரசை தற்போது வரை விமர்சித்து மட்டுமே வருகிறார். அதோடு தேர்தலில் ரஜினி கிளீன் ஸ்வீப்பாக வென்று ஆட்சி அமைப்பார் என்றும் அதிமுக 3வது இடத்திற்கே வரும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார் ஆடிட்டர்.

இந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒரு நிலைப்பாடை ஆடிட்டர் குருமூர்த்தி எடுத்து ரஜினியை ஆதரிப்பதற்கான காரணம் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பணிந்து செல்லாமல் நிமிர்ந்து நிற்கிறார் என்பது தான் என்கிறார்கள். 70 வயதில் ரசிகர் மன்றத்தின் பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி முதல் இடத்திற்கு வருவாராம், ஆனால் இந்தியாவிலேயே பாஜகவிற்கு அடுத்த அதிக தொண்டர்களை கொண்ட அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுமாம். இப்படி ஆடிட்டர் குருமூர்த்தி கணித்துள்ளதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி  மீதான தனிப்பட்ட வெறுப்பு தான் என்று அதிமுக தரப்பில் முனுமுனுக்கிறார்கள்.

click me!