ஏன் சைலன்ட் ஆயிட்டீங்க.. 7 பேர் விடுதலை என்னாச்சு.??? திமுகவை நெருக்கும் ஓ.பன்னீர்செல்வம்..

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 1:47 PM IST
Highlights

இதுமட்டுமல்ல 2-2-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்ற ஆரம்பிக்கும் போது 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர், 

திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பதிலை பார்க்கும்போது ' கழுவுற மீனில் நழுவுற மீன்'  என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திருமதி எஸ் .நளினி,  திரு.முருகன்,  திரு.சாந்தன், பேரறிவாளன், திரு. ஜெயக்குமார்,  திரு. ராபர்ட் பயாஸ்,  திரு. ரவிச்சந்திரன், ஆகியோரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் 9-9-2018 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து 7-1-2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள் கடந்து விட்டன என்றும், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல் அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்து அமைச்சரவையில் எடுத்த முடிவை இப்படி காலவரையின்றி ஓர் ஆளுநர் தன்னிடமே வைத்துக் கொள்வது மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவியிருக்கிறார். 

இதுமட்டுமல்ல 2-2-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்ற ஆரம்பிக்கும் போது 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர், இந்த பிரச்சினையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் மேற்படி 7 பேரை விடுதலை  செய்வதற்கான அதிகாரம் மேதகு இந்திய குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தெரிவித்து தமிழ்நாடு அரசின் பரிந்துரையை மேதகு இந்திய குடியரசுத் தலைவருக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிந்துரைத்தார்கள், இதன் தொடர்ச்சியாக 7 பேர் விடுதலை குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் 19-5-2021 அன்று மேதகு இந்திய குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக முந்தைய ஆளுநரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புதிய கவர்னரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது என்று மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்கள் தெரிவித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மாண்புமிகு அமைச்சரின் பேட்டியை பார்க்கும்போது இந்தப் பிரச்சினையையும், நீட் பிரச்சனையை போல் திமுக அரசு நீர்த்து போக செய்து விட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. 

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தனிப்பட்ட முறையிலும், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!