ஸ்டாலினை ஏன் எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க?: முதல்வராகிடுவார்னு பயமா!

By Vishnu PriyaFirst Published Nov 11, 2019, 7:08 PM IST
Highlights

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலியின் அலுவலகம் இருக்கும் இடமே தலித்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம்தான். அதை அபகரித்து, ஆக்கிரமித்து அலுவலகம் கட்டி வைத்துள்ளனர்! என்று சொல்லி தி.மு.க. மீது அணுகுண்டை வீசியுள்ளார் ராமதாஸ். 

ஸ்டாலினை ஏன் எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க?: முதல்வராகிடுவார்னு பயமா!

ரஜினி சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது....’ஒரு ஆளை எல்லாரும் சேர்ந்து அடிச்சா அதுக்கு பேரு வீரமா?’ என்று. இப்போ ஸ்டாலினுக்கு அதுதான் நடந்துட்டு இருக்குது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. என்று அத்தனை கட்சிகளும் ஸ்டாலினை தாறுமாறாக வெளுத்தெடுக்கிறார்கள். இது போதாதென்று புதிதாய் அரசியலுக்கு வந்திருக்கும் கமலும் ஸ்டாலினை விட்டு வைக்கவில்லை, அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று தெளிவை தராத ரஜினியும் விட்டு வைக்கவில்லை. எல்லோருமே சேர்ந்து அறிக்கை, பேட்டி, ட்விட்டர் என சகல ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஸ்டாலினை நொறுக்கி எடுக்கின்றனர். 

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலியின் அலுவலகம் இருக்கும் இடமே தலித்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம்தான். அதை அபகரித்து, ஆக்கிரமித்து அலுவலகம் கட்டி வைத்துள்ளனர்! என்று சொல்லி தி.மு.க. மீது அணுகுண்டை வீசியுள்ளார் ராமதாஸ். இது ஸ்டாலினை பலவீனப்படுத்துவது மட்டுமில்லாமல், தி.மு.க. கூட்டணியிலிருக்கும் தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளை அங்கிருந்து வெளியேற்றும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. 

பா.ஜ.க.வோ மொழி பிரச்னை, இனப் பிரச்னை என எதற்காகவும் தி.மு.க. ஆர்பாட்டம் கூட முடியாத அளவுக்கு சில ‘ஃபைல்கள்’ மூலமாக அக்கட்சியின் போராட்ட குணத்துக்கே ஆப்பு வைத்துவிட்டது! என்கிறார்கள். ப.சிதம்பரம் போல் ஸ்டாலினோ அல்லது கனிமொழியோ கைது கூட ஆகலாம்! என்றெல்லாம் டெல்லியிலிருந்து தகவல்கள் கசிவது பகீர்.

அ.தி.மு.க.வோ எல்லா லெவலிலும் தி.மு.க.வை தாக்குவது மட்டுமில்லாமல், ‘மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானதாக சொல்வது பொய்’ என்று அவரது அடிமடியிலேயே கைவைத்துவிட்டது. தனி மனித ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. பிரயோகிக்கும் ஆயுதங்கள் கடும் ஷார்ப்பானவை. 

தே.மு.தி.க.வின் பிரேமலதாவோ பொதுப் பிரச்னை, அரசியல் பிரச்னை என்று துவங்கி தன் வீட்டில் பால் திரிந்தாலும் கூட ஸ்டாலினையும், தி.மு.க.வினரையும் வறுத்தெடுத்து விளாசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஆளும் அ.தி.மு.க.வை திட்டுவதோடு மட்டுமில்லாமல், ‘தி.மு.க.வும் ஒரு ஊழல் பொதிமூட்டையே’ என்று ஸ்டாலினை நோகடிக்கிறது. பா.ஜ.க.வின் விருப்பமான நபர் என்பதால் ரஜினியை அ.தி.மு.க. பெரிதாய் சீண்டுவதில்லை. இதனால் ரஜினியின் மக்கள் மன்ற தரப்போ தி.மு.க.வை விமர்சித்து பேசிதான் அரசியலில் வளர்ச்சியை துவக்கியுள்ளது. 

ஆக இப்படி எட்டு திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் பொங்கி வரும் வேளையிலும் தங்கு தடையில்லாமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஏன் இப்படி எதிர்ப்பு? என்று தி.மு.க. தரப்பில் கேட்டால்....“சிம்பிள். அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் தான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதை இவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதன் ரியாக்‌ஷனே இது.” என்கிறார்கள். 

-    விஷ்ணுப்ரியா

click me!