கோவை அதிமுக மேயர் வேட்பாளர் யாராக இருக்கும் ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக 99 வார்டுகளிலும், திமுக 74 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக ஒரு இடத்தைகூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. திமுக 26 வார்டுகளை தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.
நடப்பாண்டு மறைமுகத் தேர்தல் மூலமாக மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு மாநகராட்சியில் பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றுவது முக்கியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் வேட்பாளர்களை திட்டமிட்டு நிறுத்தியுள்ளன. 69 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் களம் காண்கின்றன. இந்த வார்டுகளில் வெற்றி பெற இரு கட்சியினருமே தங்களுக்கு சாதகமான வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
undefined
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9, பாஜக 1 என கைப்பற்றியது. கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியும், கோவை எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்பதை நிரூபிக்க முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் களத்தில் இறங்கியுள்ளதால் கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி திமுகவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை கையில் எடுத்துள்ளார்.
அவருக்கு நல்ல வித ரெஸ்பான்ஸையும் மக்களிடையே கொடுத்து இருக்கிறது. இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறார் எஸ்.பி வேலுமணி. கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக களத்தில் இறங்கி நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவது, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்துவது, அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு நேரடியாக எடுத்து செல்லுவது என தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
பெண்களுக்கு தான் மேயர் பதவி என்பதால் ‘தேர்தல்’ களம் மிகவும் சூடுபிடித்து இருக்கிறது. திமுகவில் மூன்று பேர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவில் ஒருவர் பெயர் மட்டும் எல்லா இடங்களிலும் அடிபடுகிறது. அது யாரென்றால், சர்மிளா சந்திரசேகர். எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அதிகம் அடிபட்ட பெயர் சந்திரசேகர். அந்த சோதனையில் மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவது, ஏமாற்றுதல், கூட்டு சதி என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் A1 ஆக எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், A2 அவரது சகோதரர் அன்பரசன் மீதும் , A3 ஆகவே கேசிபி எஞ்சினியர் நிறுவனமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோக A3 ஆக கே சந்திரசேகர், ஆர். சந்திரசேகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் ஆர்.முருகேஷ், ஜேசு ராபட் ராஜா உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் A4 என குற்றம் சாட்டப்பட்டவர்தான் சந்திரசேகர். bஇவர் எஸ்.பி வேலுமணி என் வலது கரமாகவும், நிழலாகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் அவரது மனைவியை அதிமுக கேவை 38வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக களமிறங்கியிருப்பது, கோவை நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிக கவனைத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் டாக்டர் சர்மிளா, நேற்று மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார். மேலும், பிரமாண பத்திரத்தில் ரூ.38¾ கோடிக்கு சொத்து இருப்பதாக காட்டி உள்ளார். அதில், தன்னிடம் ரூ.1 கோடியே 97 லட்சத்து 78 ஆயிரத்து 787-க்கும், கணவர் சந்திரசேகரிடம் ரூ.19 கோடியே 57 ஆயிரத்து 256-க்கும் அசையும் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம் என்றும், தனது கணவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.13 கோடியே 52 லட்சம் என்றும் பதிவிட்டு உள்ளார். மேலும் தனக்கு ரூ.3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்துக்கு பரம்பரை சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 787 எனவும், தனது கணவரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 256 ரூபாய் என ரூ.38 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 43-க்கு சொத்து இருப்பதாகக் கூறி உள்ளார்.
இதேபோல் ரூ.3 கோடியே 70 லட்சத்திற்கு கூட்டு குடும்ப சொத்து இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்து உள்ளார்’ என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றினால் நிச்சயம் சர்மிளாவுக்கு தான் ‘மேயர்’ சீட் கிடைக்கும் என்று அடித்து கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இது அதிமுகவின் மற்ற நிர்வாகிகளிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. திமுகவில் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டது போல, எஸ்.பி வேலுமணிக்கும் உட்கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இதனை எப்படி சமாளிக்கப்போகிறாரோ எஸ்.பி.வேலுமணி, பொறுத்திருந்து பார்க்கலாம்.