தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க போட்டாபோட்டி... தலைவர் ரேஸில் முந்தும் ஹெச். ராஜா..?

By Asianet TamilFirst Published Aug 16, 2019, 9:00 AM IST
Highlights

முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் தலைவர் போட்டியில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரேஸில் ஹெச். ராஜா சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஹெச். ராஜாக்கு அந்த வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா செயல்பட்டுவருகிறார். செயல் தலைவராக ஜே.பி.நட்டாவும் இருந்துவருகிறார். இந்நிலையில் அகில இந்திய பாஜக உட்கட்சித் தேர்தல் செப்டம்பர் 11 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட, மாநில வாரியாகத் தலைவர்கள் தேர்வு முடிந்த பிறகு தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு, பிறகு பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேர்தல் அதிகாரி ராதாமோகன் சிங் அறிவித்துள்ளார்.

 
மேலும் டிசம்பர் 2-வது வாரத்துக்குள் தேர்தலை நடத்தி முடித்து, மாநிலங்களில் பாஜக நிர்வாகிகளை நியமிக்கவும் பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது மத்திய அரசில் முக்கியமான உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித் ஷா வகித்துவருவதால், தலைவர் பதவி ஜே.பி.நட்டாவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருந்துவருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தலைவராக இருந்துவிட்ட நிலையில், அவருடைய இடத்தைப் பிடிக்க தமிழக பாஜகவில் கடும் போட்டி நிலவிவருகிறது.  2014-ல் தமிழக பாஜக தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்துவந்தார். அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றதால், தலைவர் பதவி தமிழிசைக்கு சென்றது. தற்போது தேர்தலில் தோல்வியடைந்து அமைச்சர் பதவியும் இல்லை என்றாகிவிட்டதால், அப்பதவியைப் பிடிக்க பொன். ராதாகிருஷ்ணன் முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.


இதேபோல  மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்க தமிழிசையும் காய் நகர்த்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் தலைவர் போட்டியில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரேஸில் ஹெச். ராஜா சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட அரசியலுக்கு எதிராக வலுவான கருத்துகளை அவர் எடுத்துவைப்பதால், தலைவர் பொறுப்பு ஹெச். ராஜாவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

 
ஏற்கனவே ஹெச். ராஜா பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தும் தலைவர் பதவி கிடைக்காமல் நழுவி விட்டது. இந்த முறை அந்தப் பதவி அவருக்குக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தொண்டர்களில் ஹெச். ராஜாவுக்கென தனி ஆதரவு இருப்பதால், அவரை கட்சி மேலிடம் தலைவராக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் யார் என்பது டிசம்பரில் தெரிந்துவிடும். 

click me!