எனது எம்.பி. சம்பளம் முழுவதும் கட்சிக்குத்தான் ! வைகோ அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2019, 8:06 AM IST
Highlights

அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சம்பளம் முழுவதும் கட்சிக்கு கொடுத்துவிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாடு குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வைகோ ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடசென்னை மதிமுக சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.55,000 வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய வைகோ, “இடைவிடாத உழைப்பு மற்றும் ஓய்வில்லாத அலைச்சலால் நான் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறேன். இன்று ஒருநாள் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், மாநாட்டு வேலைகள் நிறைய  இருப்பதால் செயல்வீரர்கள் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டேன் என தெரிவித்தார்.

நமது கட்சி என்ன மிட்டா மிராசுகளின், கோடீஸ்வரர்களின் கட்சியா? என்னுடைய மாதச் சம்பளத்தைக் கழக அலுவலகத்துக்குப் பொதுச் செயலாளர், மதிமுக என்ற முகவரியில் அனுப்பும்படி நாடாளுமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன். எனக்கு வரும் படியை மட்டும் வைத்து செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்.

நல்லவேளை என்னுடைய வருகைக்காக நீங்கள் வெடி ஏதும் வெடிக்கவில்லை. வெடியால் பொதுமக்களுக்கு ஆபத்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. இங்கு ஏதாவது குடிசையில் பற்றி தீப்பிடித்தது என்றால் அந்த பழியும் நம்மீது தான் வரும். இனி நான் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் பட்டாசுகள் கொளுத்தக் கூடாது என வைகோ கண்டிப்பாக தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற  செயல்வீரர்கள் கூட்டத்தில்  சால்வைக்குப் பதிலாக வைகோவிடம் தொண்டர்கள் பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்மூலம் ரூ.1,19,050 நிதியாகக் கிடைத்துள்ளது.

click me!