ராஜ்யசபா எம்.பி. தேர்தல் அறிவிப்பு... திமுக, அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு?

By Asianet TamilFirst Published Jun 26, 2019, 9:23 AM IST
Highlights

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திமுகவைப் பொறுத்தவரை ஓரிடத்தை மதிமுகவுக்கு வழங்க உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற பட்டிமன்றம் தொடங்கியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்  ஜூலை 18-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான ஜூலை 11 அன்றே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவோர் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திமுகவைப் பொறுத்தவரை ஓரிடத்தை மதிமுகவுக்கு வழங்க உள்ளது. அந்த இடத்தில் வைகோ நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக திமுகவிடம் ஓரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்து உறுதியாக எந்தத் தகவலும் இரு கட்சித் தரப்பிலும் இல்லை. எனவே வைகோவுக்கு ஒரு சீட்டு போக, இரு சீட்டுகளில் திமுகவினர் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. தற்போதைய நிலையில் திமுக சார்பில் தொமுச பேரவை செயலர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


அதிமுகவைப் பொறுத்தவரை பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்க வேண்டும். ஆனால், பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்குவதில் கட்சிக்குள் குழப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மாநிலங்களவை இடத்தைப் பிடிக்க தம்பிதுரை, கே.பி. முனுசாமி, கோகுலஇந்திரா, மனோஜ் பாண்டியன், அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன் உசேன் உட்பட பலரும் வாய்ப்பு கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருக்கும் குறைந்த இடங்களில் போட்டி பலமாக இருப்பதால், யாருக்கு சீட்டுகளை ஒதுக்குவது என்பதில் அதிமுக தலைமை தடுமாறிவருவதாகவும் கூறப்படுகிறது.

click me!