
இந்த வாரத்தின் துவக்க நாளே தமிழக அரசியலில் மிகப் பெரும் ஆச்சரியத்துடன்தான் துவங்கியது. இரு பெரும் துருவங்களாகத் திகழும் திமுக.,தலைவர் கருணாநிதியை பாஜக.,வைச் சேர்ந்த பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து, உடல் நலம் விசாரித்ததை பெரும் ஆச்சரியகரமாகப் பார்த்தார்கள் தமிழக அரசியல் களத்தில்.
கருணாநிதியை மோடி சந்தித்திராதவர் அல்லர். குஜராத் கலவரத்துக்குப் பிறகான மோடியின் அரசியல் வாழ்வில், பலமான எதிர்ப்பலைகளை தமிழகத்திலும் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது, மோடியை சந்தித்தார். இருவரும் ஒன்றாக இணைந்து சிரித்துக் கொண்டவாறு இருந்த புகைப்படங்கள் நாளிதழ்களில் வந்த போது, அப்போதே பலர் புருவத்தை உயர்த்தினார்கள். ஆனால், இப்போதான சந்திப்பு என்பது, கருணாநிதி என்ற முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு மோடி அளித்திருக்கும் கௌரவம் என்றும், எதிர்க் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், விமர்சனங்களை மீறி ஒரு தலைவருக்கு மோடி அளித்த மரியாதை என்றும் கருத இடம் உண்டு.
ஆனால், இந்தச் சந்திப்புக்கான திட்டமிடல் எப்படி யாரால் அரங்கேற்றப்பட்டது? இதுதான் அனைவர் மனத்திலும் குடிகொண்ட கேள்வி.
இந்நிலையில், மோடியுடனான சந்திப்புக்கு திமுக., தான் முன்னேற்பாடுகளைச் செய்தது என்று ஒரு தகவல் இணையதள செய்திகளில் பரவத் தொடங்கியது. மோடியின் தமிழகப் பயணத் திட்டம் அறிந்த தி.மு.க தலைமை 'இந்தப் பயணத்தின்போது கருணாநிதியை நலம் விசாரிக்கவேண்டும்' எனச் சென்னையிலிருந்து கோரிக்கை வைத்தது. அதன்படி முந்தைய நாள் இரவுதான் மோடி அதற்கு தலை அசைத்தார் என்றும், ஆனால் இந்த விஸிட்டின் போது கடுமையான சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்றும், 'தேவையற்ற விளம்பரங்கள் செய்து கூட்டத்தைக் கூட்டக் கூடாது; சர்ச்சையோ சங்கடம் தரும் நிகழ்வோ அங்கு நடக்கக் கூடாது' என பிரதமர் தரப்பிலிருந்து நாசூக்காகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் சில விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டது தி.மு.க. அதன்பிறகே இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மு.க.அழகிரி கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதினார். அதில், தங்களின் வருகை குறித்த விவரங்களை நான் அறிந்திருக்கவில்லை. அதனால் என்னால் உங்களை சென்னைக்கு வந்து வீட்டில் வைத்து வரவேற்க இயலாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி, திமுக., தலைமையிடத்தில் இருந்து முன்னதாகவே மோடியின் கோபாலபுரம் வருகை குறித்து திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தால்,
அங்கிருக்கும் யாரேனும் நிச்சயம் மு.க.அழகிரிக்குத் தகவல் அளித்திருக்கக் கூடும். தகவல் தெரிந்து கொண்டே ஒரு வாய்ப்பை நழுவ விட நிச்சயம் அழகிரி முயன்றிருக்க மாட்டார்.
இத்தகைய நிலையில், இந்த சந்திப்புக்குக் காரணகர்த்தா யாரென பா.ஜ.க., எம்.பி., சுப்ரமணியன் சுவாமின் வெளிப்படையாக நக்கலடித்தார். தனக்கே உரிய பாணியில் அவர் கூறியது... மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படிதான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும் 2ஜி தீர்ப்பில் மாற்றம் இருக்காது... என்று சொன்ன சுவாமி, அட நானும் மயிலாப்பூர் அறிவுஜீவிதான் என்று ஒரு பிரேக் அடித்தார். சு.சுவாமி குறிப்பிடும் அந்த மயிலாப்பூர் அறிவுஜீவி, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்திதான் என்று அவர் கருத்துக்கு பின்னூட்டம் இட்டனர் பலர்.
இத்தகைய பின்னணியில், உண்மையில் நடந்தது என்னவாக இருக்கும் என்று இந்த இரு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களிடம் நாம் விசாரித்தோம். பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவிடம் விசாரித்த போது,
அவர் தெளிவாக, இந்த முடிவு பிரதமர் மோடியின் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இனிஷியேடிவ்தான். சென்னைக்குப் போகிறோம்... அப்படியே ஒரு அரசியல் தலைவரை மனிதாபிமான அடிப்படையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு வருவோம் என்று, மோடியே முடிவு செய்தார். அதுவும் முந்தைய நாள் தான். எனவே இந்த விசிட் குறித்து வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்றார்.
இதே கேள்வியை திமுக.,வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் முன் வைத்த போது, அவர் சொன்னார்... நானும் மு.க.ஸ்டாலினுடன் இப்போதுதான் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியில் வருகிறேன். கோபாலபுரத்துக்கு வந்து தலைவரைப் பார்ப்பது என்று எடுத்த முடிவு, பிரதமர் மோடி எடுத்த திடீர் முடிவு. திமுக., தரப்பில் இருந்து அப்படி எதுவும் முன்னெடுப்பு நடக்கவில்லை. திடீர் தகவல் கேள்விப் பட்டதால்தான், பிரதமர் தன் வீட்டுக்கு வரும்போது தான் இல்லாமல் போகக் கூடாது என்ற காரணத்தால்தான், தனது ஷார்ஜா பயணத்தில் ஒருநாளை ரத்து செய்து விட்டு, முன்கூட்டியே அவசர அவசரமாகத் திரும்பினார் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்... என்றார்.
இத்தகைய சூழலில், திமுக., தான் இதன் பின்னணியில் இயங்கியது என்று கூறப்பட்டால், அது திமுக., தனக்கே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்றுதான் கருத இடம் இருக்கிறது. காரணங்களை உலகு அறியும். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் மோடியே வந்து சந்தித்தார் என்றால், மோடியின் இமேஜ் தமிழகத்தில் உயரும். இத்தகைய இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில்தான் திமுக., தவிக்கிறது. பாஜக.,வுக்கோ தொண்டர்கள் சிலர் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என்றாலும், தமிழக மக்கள் மத்தியில் மோடியின் புகழை உயர்த்த இந்த சந்திப்பு பயன்படும்.