மன்மோகன் சிங்கின் விமர்சனம் மனவேதனை அளிக்கிறது..! காங்கிரஸை கதறடிக்கும் நிர்மலா சீதாராமனின் பதிலடி..!

First Published Nov 8, 2017, 11:46 AM IST
Highlights
minister nirmala sitharman criticize congress and manmohan singh


பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கறுப்புதினமாக இன்று அனுசரிக்கின்றன. அதேநேரத்தில் இன்றைய தினத்தை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்திய பாஜக அரசு அனுசரிக்கிறது.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கினார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், காங்கிரஸின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முதல் அடியை கூட எடுத்துவைக்காத காங்கிரஸ், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்க்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2011-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் மத்திய காங்கிரஸ் அரசு ஊழல் செய்துகொண்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காததிலிருந்தே கறுப்பு பணத்தை ஒழிப்பதில் காங்கிரஸின் எண்ணம் என்ன என்பது தெளிவாக புரிந்துவிடும். அதேநேரத்தில் கறுப்புப் பணத்தை ஒழிக்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் அதற்காக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கையை காங்கிரஸ் கிண்டல் செய்கிறது.

கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டுவருவதற்காகத்தானே பணமதிப்புநீக்க நடவடிக்கை மேற்கொண்டதாக கூறினீர்கள். இப்போதுதான் அனைத்து பணமும் வங்கிக் கணக்கில் வந்துவிட்டதே? இப்போது என்ன சாதித்தீர்கள்? என காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர்.

வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து தொகையும் வெள்ளை பணம் இல்லை. வங்கியில் பரிவர்த்தனையே மேற்கொள்ளாத பலரின் வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் டெபாசிட் செய்யபப்ட்டுள்ளன. அவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கருவியாகப் பயன்படுத்தி, நிலம், நீர், காற்று என அனைத்திலும் ஊழல்கள் நடந்தன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்தார் மன்மோகன் சிங். ஆனால் தற்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சட்டப்பூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை என பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சிக்கிறார்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், கறுப்புப் பணத்தை ஒழிக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ஊழலுக்கு உதவிவிட்டு தற்போது மிகவும் அப்பட்டமாக மத்திய பாஜக அரசை விமர்சித்திருப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன், காங்கிரஸின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.
 

click me!