பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அட்டகாசமான விளக்கம்..!

First Published Nov 8, 2017, 11:13 AM IST
Highlights
defence minister nirmala seetharaman explained about demonetisation


பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கறுப்பு தினமாக அனுசரித்துவருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் இன்றைய தினத்தை கறுப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய பாஜக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

கறுப்பு பணத்தை ஒழிப்பதாக 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக உறுதியளித்திருந்தது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கிலேயே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கறுப்புப் பண ஒழிப்பு குறித்த தெளிவான விவரங்களை தெரிவிக்காவிட்டாலும் அதை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திட்டவட்டமாக மேற்கொள்வோம். அதன் ஒரு பகுதியாகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெளியான சர்வதேச ஆடிட்டிங் ஃபண்ட்ஸின் அறிக்கையின்படி, சர்வதேச அளவில் கணக்கில் காட்டாமல் பதுக்கப்பட்டுள்ள பணத்தில் பெரும்பாலானவை உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

அதேபோல, ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்வதன் விளைவாக யார், எங்கு, எதை, எவ்வளவிற்கு வாங்கினார்கள் என்பது கணக்கு காட்டப்படாமல், அதிகாரப்பூர்வமாக பதிவிடப்படாமல் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டது. இதனால் அந்த பணத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் அரசால் வரி வசூலிக்க முடியாது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. வெளிப்படையான பரிவர்த்தனைகளின் மூலமாகவே அனைத்து வகையான கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனைகளும் கணக்கில் வரும். அதற்காகவே பணமதிப்புநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது.

இந்தியாவில் 2015-ம் ஆண்டுவரை 86% பண பரிவர்த்தனைகள் ரொக்கப் பரிவர்த்தனையாகவே மேற்கொள்ளப்பட்டது. இதுமாதிரியான முறையற்ற பொருளாதாரத்தால் நாட்டிற்கு எந்தவிதமான பலனும் பலமும் கிடையாது. அனைத்துவகையான பரிவர்த்தனைகளையும் வங்கி மூலமாக கணக்கில் கொண்டுவருவதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2015-ல் ஜம்மு காஷ்மீரில் 4000-க்கும் அதிகமாக இருந்த கல்லெறி சம்பவங்கள், தற்போது நூற்றுக்கணக்கில் தான் உள்ளன. அந்தளவிற்கு வன்முறை சம்பவங்களும் பயங்கரவாத தாக்குதல்களும் குறைந்துள்ளன. பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் வாங்க முடியவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாக அவரகளால் ஆயுதங்கள் வாங்க முடியவில்ல. இதே ரொக்கப்பரிவர்த்தனையாக இருந்தால், அவர்கள் எளிதில் ஆயுதங்களை வாங்கிவிடுவர்.

கறுப்புப் பண ஒழிப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களுக்காகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 

click me!