
சென்னையில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக சென்னையில் பெய்து வந்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. மேலும், தொடர் மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று அவர் கூறினார்
உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தலையும் கண்டு அதிமுக அஞ்சாது என்றார். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
மழை வெள்ளத்துக்கு தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை என்றார். மேலும், மழைநீர் தேங்குவதால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.