உண்மையில் நீட் தேர்வை கொண்டு வந்தது யார்..? தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் திமுக..!

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2020, 4:44 PM IST
Highlights

 அப்போது விட்டுவிட்டு இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார் மு.க.ஸ்டாலின். 

நீட் தேர்வை கொண்டுவர காங்கிரஸ் கட்சிக்கு துணைபோனது திமுக. அப்போது மத்திய ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். கருணாநிதி சொன்னால் பிரதமரே கேட்பார் என பெருமை பேசிக்கொள்ளும் திமுக, மைனாரிட்டி அரசான காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்து இருக்கலாம்.

18.07.2013 ம் தேதி நீட் தேர்வே வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. அதன்பிறகு அந்த உத்தரவை எதிர்த்து மறுபரிசீலனைக்கு உச்சநீதிமன்றத்தை நாடியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ்.

அதிமுக ஒருபோதும் நீட் தேர்வை விரும்பவில்லை. நீட் முதன்முதலில் நடத்தப்பட்டது 2016-17 ஆம் ஆண்டு. அப்போது தமிழ்நாட்டுக்கு ஆளும் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் விலக்கு கிடைத்தது. 2017 பிப்ரவரியில், தமிழ்நாட்டை நீட்டில் இருந்து நிரந்தரமாக விலக்குவதற்கு இரண்டு மசோதாக்களை அதிமுக அரசு அறிமுகப்படுத்தியது. அது ஜனாதிபதி ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், நீட் தேர்வு 2017-ல் நடத்தப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில், ஸ்டேட் ஃபோர்டு மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி, அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. டிவிசன் பெஞ்ச் முன் மேல்முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அதை நிராகரித்தது.

அதிமுக, இன்னும் ஒராண்டிற்கு விலக்கு அளிக்க முயற்சித்தது. இருப்பினும், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு நீட் தேர்வு அவசியம் என்ற தீர்ப்பை பெற்று கொடுத்தார். ஆனால் இன்று நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க அதிமுக அரசு தான் காரணம் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் கூறி அரசியல் நடத்தி வருவது தான் வேடிக்கையாக உள்ளது.

தமிழக மாணவர்கள் மீது அக்கறை உள்ள அரசாக திமுக செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டு இருந்தால் இந்த நீட் தேர்வால் தற்கொலை நடந்திருக்காது. நீட் தேர்வே நடந்திருக்காது. அப்போது விட்டுவிட்டு இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார் மு.க.ஸ்டாலின். முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.,வுமான கே.என்.நேருவோ, திமுக ஆட்சிக்கும் வந்தால் நீட் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதி வழங்கப்படும் என்கிறார். இது நாடகத்தின் உச்சகட்டம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

click me!