உ.பி.யில் அடுத்த ஆட்சி யார்.? அரசியல்வாதிகளின் கனவில் வந்துசொல்லும் பகவான் கிருஷ்ணர்.. பாஜக-சமாஜ்வாடி கூத்து!

By Asianet TamilFirst Published Jan 4, 2022, 8:39 PM IST
Highlights

 “முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மதுரா தொகுதியில் நிறுத்துங்கள். கிருஷ்ணர் தன் கனவில் வந்து இதைக் கூறினார்” என்று ஹர்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று பகவான் கிருஷ்ணர் என்னிடம் கனவில் கூறுவதாக பாஜகவை கேலி கிண்டல் செய்திருக்கிறார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். 

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வேகத்தில் ஆளும் பாஜக உள்ளது. இதெபோல மீண்டும் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாடி கட்சி உள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் காய்களை நகர்த்தி வருகின்றன. இந்நிலையில் பாஜக - சமாஜ்வாடி இடையே தற்போது கேலி, கிண்டல், வார்த்தைப் போர் என வெடித்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஹர்நாத் சிங் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், “முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மதுரா தொகுதியில் நிறுத்துங்கள். கிருஷ்ணர் தன் கனவில் வந்து இதைக் கூறினார்” என்று ஹர்நாத் சிங் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “கட்சி எந்த இடத்தில் சொல்கிறதோ அங்கேயே நிற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். பாஜக எம்.பி.யின் இந்தப் பேச்சை சமூக ஊடகங்களில் பலரும் கிண்டலடித்தனர். இந்நிலையில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் இந்த விஷயத்தைக் குறிப்பிடாமல் பாஜகவை கிண்டலடித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் தோல்வி அடைந்து விட்டார். அவரை யாருமே காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு இரவும் பகவான் கிருஷ்ணர் என் கனவில் தோன்றுகிறார். சமாஜ்வாதி கட்சிதான் ஆட்சியமைக்கப் போகிறது என்று என்னிடம் கூறுகிறார்” என்று அகிலேஷ் யாதவ் கிண்டலடித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக - சமாஜ்வாடி கட்சி இடையே வார்த்தைப் போரும், கேலி கிண்டலும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!