
ஜெயலலிதா நின்று வென்ற தொகுதி என்பதாலோ என்னவோ ஆர்.கே.நகர் அத்தனை கவனம் பெற்றது. முன்னர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று, சிறை சென்று, தொகுதி காலியாகி, அடுத்து ஆர்.கே.நகரில் நின்று வென்று, அதிலும் முழுக் காலமும் கவனம் செலுத்த முடியாமல் ஆறே மாதங்களில் விட்டுவிட்டு காலமானார் ஜெயலலிதா.
அவர் காலமான பின்னர், அந்தத் தொகுதி மக்களுக்கு இடைத்தேர்தல் உருவில் சற்றே தற்காலிக நிதி உதவிகள் கிடைக்க, அதுவே இடைத்தேர்தல் தள்ளிப்போக ஒரு காரணமானது. அப்போதே அந்தத் தொகுதியில், கேலிக்கூத்தான விஷயங்கள் பல அரங்கேறின. ஜெயலலிதாவின் பூதவுடல் இறுதிச் சடங்கில் வைக்கப் பட்டது போல் பேனர்களைச் செய்து, வண்டியில்கட்டி பிரசாரத்தில் இறங்கினார்கள் பன்னீர்செல்வம் தரப்பினர். இப்போதும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அரசியல் கேலிக் கூத்துகளின் களனாக மாறியிருக்கிறது.
இந்தப் பரபரப்புகளைக் கிளப்பியவர்கள் இருவர். நடிகர் விஷால், ஜெ.தீபா என்ற இந்த இரு தரப்பும், தேர்தல் களேபரத்தின் துவக்கத்தில் பிரமாண்டமாக ஊடகங்களுக்குத் தீனி போட்ட புண்ணியத்தைத் தேடிக் கொண்டார்கள்.
விஷாலுக்கு இதில் போட்டியாக நின்றவர் ஜெ.தீபா. விஷால் செய்த ஒவ்வொன்றையும் காப்பி அடித்து, தானும் அப்படியே செய்ய முயன்றார். விஷால் வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறார் என்ற செய்தியுடன் கூடவே தீபாவும் வேட்பு மனு தாக்கல் செய்தியானது.
விஷாலுக்கு முன்பே தீபா வேட்புமனு நிராகரிக்கப் பட்டது. இருவர் படிவங்களும் குளறுபடிகளுடன் இருந்தன. தனது படிவம் நிராகரிக்கப் பட்ட போது, போராட்டத்தில் குதித்தார் விஷால்.. தீபாவும் தன்னால் இயன்ற அளவில் தனக்கான ஆதரவு பலத்துடன் போராட்டத்தில் குதித்தார். விஷால், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்தார். உடனே தீபாவும் சென்றுவிட்டார்.
விஷாலுக்கு டிவிட்டர் கணக்கெல்லாம் கையாளத் தெரிந்திருக்கிறது. தன் மனு மீதான நிராகரிப்பை குமுறிக் குமுறிக் கொட்டித் தள்ளிய விஷால், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு டாக் செய்து டிவிட்டராகப்போட்டார். இன்னும் ஜெ.தீபா, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லையோ என்னவோ!
ர்கே நகர் தேர்தலில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவ்வளவுதான்! கொதித்தெழுந்தார் தீபா. தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்தார். புகார் மனு அளித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மிரட்டினர். வேட்புமனு தாக்கலின் போது நான் அளித்த விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. பரிசீலனையின் போது, விண்ணப்பம் மாற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலுவலரை சந்தித்த போது, எனது விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆவணங்களை பாதி பாதியாகத் தந்தார். வழக்கறிஞர் உதவியுடன் விண்ணப்பத்தை நிரப்பியதால், தவறாக இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். இவ்வளவு முறைகேடாக தேர்தல் நடத்துவதற்கு பதில் நடத்தாமலேயே இருக்கலாம்” என்று பொருமித் தள்ளினார்.
இருவருக்கும் அரசியல் ஆசைகள் பல. ஆனால், பொதுமக்கள் பெயரைச் சொல்லி தப்பித்து வருகின்றனர். இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இன்னும் எத்தனை எத்தனை காமெடிகளைப் பார்க்க வைக்கப் போகிறதோ..?