திமுக போட்டி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மருமகன் மரணத்திற்கு காரணம் யார்..? தப்பியோடியவர்களுக்கு வலை..!

By Thiraviaraj RMFirst Published Oct 12, 2020, 1:44 PM IST
Highlights

உயிரிழந்த துளசிராமனின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக போட்டி எம்.எல்.ஏ.,வான பாஜக ஆதரவாளர் கு.க.செல்வத்தின் மருமகன் பூந்தமல்லி அருகே நடந்த சாலை விபத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். 

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகவும் இருந்த கு.க.செல்வத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் நியமனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திமுக தலைமைக்கு எதிரான நடவடிக்கையால் கு.க.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு போட்டி எம்எல்ஏவாக உள்ளார்.

கு.க.செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசிராமன். இவரது தந்தை சென்னை காவல்துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். துளசிராமன் சென்னை, கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில் வசித்து வந்தார். வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிளைவுட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது மகள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவமனையில் மருத்துவம் பயில்கிறார். அங்கேயே தங்கிப் படித்து வருகிறார்.

துளசிராமன் தனது மகளைக் கல்லூரிக்குச் சென்று பார்த்து வருவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று கல்லூரியில் படிக்கும் மகளைப் பார்த்துவிட்டு இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துளசிராமன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் உயிருக்குப் போராடிய துளசிராமனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே துளசிராமன் உயிரிழந்துள்ளார். விபத்து எந்த இடத்தில் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துளசிராமன் மீது மோதிய வாகனம் எது என்பதை அறிய இருசக்கர வாகனத்தைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் வாகனம் கிடக்கலாம். அப்படிக் கண்டறியும் பட்சத்தில் அங்கு சிசிடிவி காட்சிகள் எதுவும் சிக்குகிறதா என்றும் விசாரிக்க உள்ளனர்.

துளசிராமனை மருத்துவமனையில் அனுமதித்தது விபத்தை ஏற்படுத்தியவர்களா? அல்லது பொதுவான நபர் அனுமதித்துவிட்டு வழக்குக்குப் பயந்து சென்றுவிட்டாரா என்பதை அங்குள்ள அட்டெண்டர் கொடுத்த தகவல், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திக் கண்டறிய உள்ளனர். உயிரிழந்த துளசிராமனின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 

click me!