“வின்னர் யார்? சுயநல எடப்பாடியாரா! டபுள் கேம் பன்னீரா!” அதிமுக உண்மைத் தொண்டர்களின் மனக்குமுறல்…

By Asianet News TamilFirst Published Mar 7, 2022, 5:47 AM IST
Highlights

அன்று மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இருந்த அ.தி.மு.க., ஜெயலலிதா மறைவுக்குப் பின் மிலிட்டரி ஹோட்டல் கொத்து பரோட்டா போல் பீஸ் பீஸாக பிரிந்து கிடக்குது

‘என் இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டுக்கு நிகரான ஒழுக்கமான இயக்கம். இப்படிப்பட்ட கழகத்தினரை கொண்டிருப்பதற்காக உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன்.’ அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் கோலோச்சிய ஜெயலலிதா மிகப்பெரிய இறுமாப்புடன் பல முறை பேசிய வார்த்தைகள் இவை. அன்று மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இருந்த அ.தி.மு.க., அவரது மறைவுக்குப் பின் மிலிட்டரி ஹோட்டலின் கொத்து பரோட்டா போல் பீஸ் பீஸாக பிரிந்து கிடப்பதும், தொடர் தோல்விகளால் சரிந்து சின்னாபின்னம் ஆவதுமாய் இருக்கிறது.

ஜெ., மறைந்து, சசிகலா சிறை சென்ற பின் பல்வேறு குளறுபடிகளுக்குப் பின் ‘தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி’ எனும் இருவரின் தலைமையின் கீழ் இயங்க துவங்கிய அந்தக் கட்சியில் சமீப காலமாக மிக மோசமான குழப்பங்கள் தலைவிரித்தாடுகின்றன. அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் படு தோல்விக்குப் பின் உச்சம் தொட்டிருக்கிறது பிரச்னைகள். இதுவரையில் ‘பன்னீர் தலைமையிலான தென் மண்டல அ.தி.மு.க., எடப்பாடியார் தலைமையிலான கொங்கு மண்டல அ.தி.மு.க.’ என்று மட்டும் பிரிந்துகிடந்த அ.தி.மு.க., இப்போது தங்களுக்குள் கட்டிப்பிடித்து சண்டையிடுமளவுக்கு முறைப்பு விவாதத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் கமிஷனின் விதிப்படி விரைவில் அக்கட்சியில் இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டப்பட வேண்டிய சூழல் உள்ளது. இவ்வளவு சென்சிடீவான சூழலில் பொதுக்குழுவை கூட்டினால் கண்டிப்பாக வேட்டி கிழிப்பு, ரத்தம் பார்ப்பது என்று கட்சி அசிங்கப்படுவதோடு, மிகப்பெரிய பிரளயமே வெடிக்கலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் அஞ்சுகின்றனர்.

அதனால் மீண்டும் ஒற்றைத் தலைமை! எனும் நிலையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. அதுவே நகர்கிறது என்பதை விட சில தரப்புகள் தள்ளுகின்றன என்பதே உண்மை. ’குழப்பங்கள் தீர வேண்டுமென்றால் ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். வெற்றியோ தோல்வியோ அது ஒரே தலைவரின் முடிவாக இருக்கட்டும். யார் வல்லவரோ, நல்லவரோ அவர் தலைமையேற்கட்டும். நாங்கள் அதற்கு கட்டுப்படுகிறோம்’ என்று அனைத்து மாவட்ட தொண்டர்களும் குரல் கொடுக்க துவங்கிவிட்டனர்.

இதனால் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருமே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டதாகவே தெரிகிறது: அந்த ஒற்றைத் தலைமை நாற்காலியில் சென்று அமர.. இந்நிலையில் உட்கட்சிக்குள் இருந்து நடுநிலை நபர்கள் ஷார்ப்பான விமர்சனத்தை வைக்க துவங்கியுள்ளனர். அவர்களின்  பதிவு இதுதான் “ஒற்றை தலைமை அரியாசனத்தில் அமரும் தகுதி பன்னீர், எடப்பாடி இருவருக்குமோ அல்லது இருவரில் ஒருவருக்குமோ இருக்கிறதா என்று தொண்டர்கள் தங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்ல வேண்டும்.  பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் உட்கார்ந்த இருக்கையில் அமரக்கூடிய அளவு பொதுநல சிந்தனையும், தலைமைப் பண்பும் உள்ளவர்களா இவர்கள்? எடப்பாடியார் கொங்கு மண்டலமே தமிழகம், கொங்கு அ.தி.மு.க.தான் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் என நினைத்து கட்சியை முடித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் கொங்கிலும் தோற்ற பிறகும் அவர் திருந்தவில்லை. பன்னீருக்கு எல்லாமே சுயநலம்தான். அம்மா மறைவுக்குப் பின் சசிகலா தரப்பு தன் முதல்வர் பதவியை பறித்ததால் தர்மயுத்தம் நடத்தினார், பா.ஜ.க.வை தாஜா செய்து துணை முதல்வர் பதவியை பெற்றார், கழக ஒருங்கிணைப்பாளரானார்.

இப்போது எடப்பாடியாரை கவிழ்ப்பதற்காக அதே சசிகலாவை உள்ளே அழைக்க துடிக்கிறார். தன் தம்பி சசிகலாவை பார்க்க சென்றதும் அவருக்கு தெரியும், ஆனாலும் கட்சி கட்டுப்பாட்டுக்காக நீக்குவது போல் நீக்கியுள்ளார். அவருக்கு எல்லாமே நாடகம்தான். இப்போதும் டபுள் கேம் ஆடுகிறார். இவர்களை நம்பித்தான் நம் நாளைய அ.தி.மு.க. இருக்குது. இதெல்லாம் தலையெழுத்து.” என்று ஓப்பனாக வெடித்துள்ளனர்.

ஒத்தயா வெல்லப்போவது யாருங்க?

click me!