கூட்டணிக்கு தலைமை யார்..? அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெடி வைத்த வி.பி.துரைசாமி!!

By Asianet TamilFirst Published Aug 13, 2020, 8:10 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி என்றால், திமுக - அதிமுக தலைமையில்தான் அமையும். சில வேளை மூன்றாவதாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடும். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தொடரும் என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால், ஓரிறு மாதங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமான வி.பி.துரைசாமி அளித்த பேட்டியில், ‘கடந்த வாரம் வரை திமுக - அதிமுக என்று இருந்த நிலை மாறி, கு.க.செல்வம் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த பிறகு திமுக-பாஜக என்று மாறிவிட்டது’ என்று பேட்டி அளித்தார். 
அப்படியென்றால், பாஜக தலைமையில்தான் கூட்டணியா என்ற கேள்விக்கு, ‘ஆமா, நாங்க தேசிய கட்சிங்க’ என்று கூலாகப் பேட்டி கொடுத்தார் வி.பி.துரைசாமி. துரைசாமியின் இந்தப் பேட்டிக்கு அதிமுக உடனடியாக பதிலடி கொடுத்துவிட்டது. அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘பாஜக தலைமையில் கூட்டணி என்று மாநில தலைவர் எல்.முருகன் கூறவில்லை. நிர்வாகிகள் பேசுவது எல்லாம் கட்சியின் கருத்து அல்ல.’ என்று முடித்துக்கொண்டார். 
ஆனால், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான கே.பி.முனுசாமி வி.பி. துரைசாமியை விமர்சித்து பதிலடி கொடுத்தார். ‘துரைசாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதை சொல்வது யார் என்று பார்க்க வேண்டும். வி.பி.துரைசாமி முன்பு ஜெயலலிதா வாழ்க என்றார். பிறகு கருணாநிதி வாழ்க என்றார். இப்போது பாஜக வாழ்க என்கிறார். அவர் பேசுவதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. ஆனால், அப்போது வி.பி.துரைசாமி பாஜகவில் இல்லை’ என்று ஒரே அடியாக விமர்சித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்களும் இருப்பார்கள் என்று மாநில தலைவர் எல்.முருகன் பேசிவருகிறார். முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களைக் கிளப்பி நெருக்கடி கொடுக்க முயற்சித்துவருகிறது பாஜக. இந்நிலையில் பாஜக தலைமையில் கூட்டணி என்று மாநில நிர்வாகி வி.பி.துரைசாமி பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

click me!