யாருங்க அந்த துரோகிங்க..? சொல்லுங்க வைகோ..! கடிதம் அனுப்பி வைகோவை வெறுப்பேற்றும் கட்சி நிர்வாகி.!

By Asianet TamilFirst Published Apr 6, 2022, 10:55 AM IST
Highlights

“எந்தெந்த தேர்தலில், எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என கள நிலவரத்தை அறிந்து, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பல நிர்வாகிகள் கை காசை இழந்து, வீதிக்கு வந்திருக்கும் நிலை உருவாகியிருக்காது". 

மதிமுகவில் உள்ள துரோகிகள் யார் என்பதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்க வேண்டும் என்று அக்கட்சியின் அதிருப்தி  நிர்வாகிகளில் ஒருவரான திருவள்ளூர் மாவட்ட்ச் செயலாளர் செங்குட்டுவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வைகோ மகனுக்கு பதவி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய மகன் துரை வைகோவை கடந்த ஆண்டு கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக அறிவித்தார். இதனால் மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும் துரை வைகோவுக்கு பிறகு மதிமுகவில் எல்லாமும் அவர்தான் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் துரை வைகோவை தலைமை நிலைய செயலாளர் என்ற பதவியிலிருந்து தலைமைக் கழக செயலாளர் என்று பதவியாக மாற்றி, அங்கீகாரம் பெற அண்மையில் வைகோ பொதுக்குழுவை கூட்டினார். ஆனால், இந்தப் பொதுக்குழு கூட்டத்தை கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளுவர் மாவட்ட்ச் செயலாளர் செங்குட்டுவன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்சி நிர்வாகி கடிதம்

துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் சிவகங்கையில் ஆலோசனை நடத்தி போர்க்கொடியும் உயர்த்தினர். என்றபோதிலும், பொதுக்குழுவில் துரை வைகோவை தலைமை கழக செயலாளராக்க அங்கீகாரம் கிடைத்தது. அதேவேளையில் துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் மதிமுக ஆட்சிமன்றக் குழு செயலாளருமான செங்குட்டுவன் வைகோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “எந்தெந்த தேர்தலில், எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என கள நிலவரத்தை அறிந்து, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பல நிர்வாகிகள் கை காசை இழந்து, வீதிக்கு வந்திருக்கும் நிலை உருவாகியிருக்காது. 

துரோகி யார்?

நீங்கள் எப்போதும் உயர்நிலைக் குழுவை கலந்து ஆலோசிக்காமல் உங்கள் முடிவை நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள். தற்போதும் உங்கள் முடிவை நிலை நாட்டி உள்ளீர்கள்; அது உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. இனிமேல் மதிமுகவில் உயர்நிலைக் குழு அவசியமற்றது. உயர்நிலைக் குழுவில் ஒன்பது பேர் அங்கம் வகிக்கிறோம். நாங்கள் துரோகிகள் என்றால், தியாகிகள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். பொதுக்குழு மேடையில், 'துரோகிகள் ஓரிருவர் இன்னும் இங்கு உள்ளனர்' என சொன்னீர்களே, அந்த இருவர் யார்?” என்று வைகோவுக்கு செங்குட்டுவன் கேள்வி எழுப்பி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

click me!