கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு சொல்ல நீங்க யார்.? BJP MLA காந்தியை டார் டாராக கிழித்த அமைச்சர் மனோ தங்கராஜ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2022, 3:51 PM IST
Highlights

ஒரு அமைச்சரை கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்திக்கு யார் அதிகாரம் கொடுத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்

ஒரு அமைச்சரை கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்திக்கு யார் அதிகாரம் கொடுத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். திருநீறு வைக்காத கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த அமைச்சர் கோவிலுக்கு வரக்கூடாது என பாஜகவைச் சேர்ந்த எம். ஆர் காந்தி  கூறியிருந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் இவ்வாறு  கேள்வி எழுப்பியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க  அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு சென்றிருந்தார். அப்போது  அங்கு பாஜகவினர் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் அமைச்சர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க சென்றபோது பாஜகவினர் இப்படி நடந்து கொண்டது புது சர்ச்சையாக வெடித்தது.  வேண்டுமென்றே அமைச்சரை இழிவுபடுத்தும் நோக்கில்  பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக  தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த நாகர்கோயில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி  இந்து தெய்வங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து தெய்வங்களை வழிபடாதவர்கள், இந்து ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்து கோயிலுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்து கோவில் நிகழ்ச்சிகளில் அவர்கள் தலைமை ஏற்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின்  திமுகவில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் என கூறுகிறார். அதில் பல அமைச்சர்களும் இந்துக்களாக உள்ளனர், அப்படி இருக்கும்போது அவர் ஏன் ஒரு இந்து மதத்தை சேர்ந்த அமைச்சரை அனுப்பாமல் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமைச்சரை அனுப்ப வேண்டும். திருநீறு குங்குமம் வைக்காத ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரை கோவிலில் வந்து தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதிக்க மாட்டோம் என அவர் கூறியிருந்தார்.

அவர் இந்த கருத்து மற்றொரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. எம்.ஆர் காந்தியின் இந்த  கருத்தை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எம்ஆர் காந்தியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்ஆர் காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு. அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது? 1996-ம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோவில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன். 

குமரி மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உத்தரவின் பெயரில் கோவில்களில் ₹50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா? பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து  மக்கள் சிரிக்கின்றனர். மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைத்திருந்தனர்.ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மிகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர். பஜாகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன். இவ்வாறு அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

click me!