
‘‘திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தர்மர் எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருக்குறளை சமூகத்திலிருந்து எப்படி முடியாதோ அதுபோலதான் திருப்பரங்குன்றமும்’’ எனத் தெரிவித்தார்.