வளர்ச்சியை விரும்பாதவர்கள் எல்லாரும் ராஜபக்ஷேவுக்கு துணை போகிறவர்கள் - புதுசு புதுசா சொல்றாரே பொன்.ரா... 

First Published Jun 22, 2018, 9:44 AM IST
Highlights
who all are not love growth are going assist with Rajapakshe - pon.rathakrishnana


தூத்துக்குடி
 
கன்னியாகுமரியின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு துணை போகிறவர்கள்தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.  அதற்கு முன்னர் அவர், கோயிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "யோகா கலையின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். இதனை அனைத்து நாடுகளும் ஏற்று, ஆண்டுதோறும் உலக யோகா தின விழா கொண்டாடப்படுகிறது. பள்ளிக் கூடங்களில் யோகா பயிற்சி அளிப்பது மாணவ - மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார். இதனால்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தந்திருக்கிறார். அவருக்கு தமிழ் சமுதாயம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தது பயனற்றது. 

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டமும் வரக் கூடாது என்று சில பயங்கரவாதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். 

தமிழகத்தில் எந்த திட்டங்களை செயல்படுத்தவும் எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சனையை உருவாக்கி, போராட்டத்தை தூண்டுகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் நக்சல் அமைப்பினர் கைதானபோதும்கூட, அதுகுறித்து எந்த கட்சியினரும் பேச மறுக்கின்றனர். அவர்கள் பயங்கரவாதிகள் வழியில் செல்ல போகிறார்களா?

கன்னியாகுமரியின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு துணை போகிறவர்கள்தான். 

தமிழகத்தில் 10 பேர் மத்திய மந்திரிகளாக இருந்தபோதும் கொண்டுவரப்படாத திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரும்போது எதிர்க்கிறார்கள்.

அடுத்தாண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். பா.ஜ.க.வுக்கு எதிராக எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பயனில்லை. அவர்களால் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை திட்டங்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று அவர் கூறினார்.
 

click me!