
டெல்லியில் பிரதமரை நாங்கள் சென்று பார்த்தபோது காவடி தூக்கியதாகச் சொன்னவர்கள், இப்போது எந்தக் காவடியை தூக்கி கொண்டு சென்றார்கள் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசலில் அதிமுக சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அனர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக அரசு இருந்தபோது வீட்டு வரி, சொத்து வரி போன்றவை உயர்த்தப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு திட்டமிட்டு வீட்டு வரி, சொத்து வரிகளை உயர்த்தி இருக்கிறார்கள். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
போதை பொருள் புழக்கம்
மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொத்து வரி, மக்களின் சொத்தை பறிக்கும் வரியா என்று கேட்டார். தற்போது இந்த வார்த்தையை அவருக்கு சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. இளைஞர்களின் எதிர்காலத்தை இந்தப் போதைப்பொருள் பயன்பாட்டால் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மெத்தனப் போக்கில் இருக்கிறார். அதனால், போதை பொருள் புழக்கம் அதிகமாகியிருக்கிறது.
கோபேக் மோடி சொன்னீங்களே
அதிமுக அரசு அடிமை அரசாக இருக்கிறது. டெல்லிக்கு காவடி தூக்குகிறார்கள் என்றெல்லாம் ஸ்டாலின் பேசினார். இப்போது அவர் டெல்லி சென்று பிரதமரை பார்த்திருக்கிறார். உள் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சரைப் பார்த்து இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நாட்டின் பிரதமர் தமிழகத்துக்கு வரும்போது கோபேக் மோடி என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இன்று முதல்வரான பிறகு டெல்லி சென்று இரண்டு முறை சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகம் வளர்ச்சிப் பாதை கொண்டு செல்ல உழைத்தோம். அதனால், நல்ல திட்டங்கள் வந்தன. நாங்கள் சென்று பார்த்தபோது காவடி தூக்கியதாகச் சொன்னவர்கள், இப்போது எந்தக் காவடியை தூக்கி கொண்டு சென்றார்கள்?” என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.