மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தது துயரமான சம்பவம். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அதேபோல், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் இபிஎஸ் ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தது துயரமான சம்பவம். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். 2 ஆண்டு காலம் திமுக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க பிரத்யேக குழு அமைத்து நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
மேலும், பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த சமூகப் போராளியும் நடிகரும் கள்ளச்சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் சமூக போராளி என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் தற்போது விடியா அரசின் கைக்கூலியாகவிட்டனர் என இபிஎஸ் விமர்சனம் செய்தார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மெத்தனத்தால் இன்று பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் தவறிவிட்டது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளோர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை பற்றி போலீசுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால், நடவடிக்கை இல்லை. சம்பவம் நடைபெற்றவுடன் சாராய வழக்குககளில் 1600 பேர் கைது செய்திருக்கிறார்கள். மது குடிப்பவர்களை குறைப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துகிறது விடியா திமுக அரசு. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான உயிரிழப்புகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக் மதுபான விற்பனையில் கூட 10 சதவீதம் கமிஷன் அடிக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.