பரிசோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் பணம் எங்கே செல்கிறது ? எப்படி திரும்ப பெறுவது ? முழு விவரம் உள்ளே.

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 1:07 PM IST
Highlights

50,000 முதல் 10 லட்சம் வரையிலான ஆவணங்கள் இல்லாத பணம் தேர்தல் ஆணையத்திடமும், பத்து லட்சத்திற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பரிசோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் பணம் எங்கே செல்கிறது ? பறிமுதல் செய்யப்படும் பணத்தை எப்படி திரும்ப பெறுவது ?  என்பது தொடர்பான தகவல்களை தற்போது பார்க்கலாம்: பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்டோர் 50,000 ரூபாய் வரையிலான பணத்தை எடுத்துச் செல்வதற்கு எந்த வித தடையும் இல்லை

50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வோர் அதற்கு தகுந்த ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் அதற்கான ரசீது, நகை வாங்கியதற்கான ரசீது மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் அதற்கான ரசீது இவற்றில் ஏதேனும் தகுந்த ஆவணங்கள் வைத்திருந்தால் அவர்களது பணம் பறிமுதல் செய்யப்படாது. 

தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லக்கூடிய பணங்கள் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும். பறக்கும் படை மற்றும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் பணம் மாவட்ட தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பு மாவட்ட கருவூலத்தில் வைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் வீட்டில் வைத்திருந்தால் அதனை எடுத்து வருவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும். 

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக கருவூலத்தில் இருக்கும் தங்களது பணத்தை 24 மணி நேரத்திற்குள்ளாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் 50,000 முதல் 10 லட்சம் வரையிலான ஆவணங்கள் இல்லாத பணம் தேர்தல் ஆணையத்திடமும், பத்து லட்சத்திற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.10 லட்சத்திற்கு அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் வாகனத்தில் கட்சிக்கொடி , வேட்பாளர் படமோ இருந்தால் அதனை தேர்தல் ஆணையமே விசாரிக்கும். இல்லாதபட்சத்தில் வருமான வரித்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்படும்.
 

click me!