
காரியம் வேண்டுமா வீரியம் வேண்டுமா என்று கேட்டால் காரியம் தான் வேண்டும் என்றும், காரியம் கிடைக்காவிட்டால் வீரியம் தானாக வரும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக அவசர செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான், அதை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு பாமக உள்ளிட்ட வன்னியர் அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக இன்று காலை பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் பேசிய ராமதாஸ், தமிழக முதலமைச்சர் முன்பைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு போராட்டத்திற்கு அவசியம் இருக்காது என நினைக்கிறேன். அம்பாசங்கர் ஆணையத்தில் இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டுக்கும் வன்னியர்களுக்கும் எதிரானவர்கள். தற்போது நான் போராட்டம் அறிவிக்க மாட்டேன், முதல்வர் ஸ்டாலின் இதை விரைவில் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் வன்னியர்கள் எத்தனை சதவீதம் பேர் தேர்வாகி உள்ளார்கள் என்ற புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால் போதும், வன்னியர்கள் பாதிக்கப்படுவது முதல்வருக்கு நன்கு தெரியும் என்றார். அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சமூக நீதிக்கு கேடு வந்துவிட்டது, அதை நாம் நிலை நிறுத்த வேண்டும், அதனால்தான் இங்கே கூடி இருக்கிறோம் என்னார். காரியம் வேண்டுமா வீரியம் வேண்டுமா என்று கேட்டால் காரியம்தான் வேண்டும், காரியம் கிடைக்காவிட்டால் வீரியம் தானாகவே வரும் என்றார். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது பாட்டாளி மக்கள் கட்சியால் தான் என்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக நல்ல தீர்வு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. உள் ஒதுக்கீட்டில் தேவையான புள்ளிவிவரங்கள் சரியாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஒரு வாரத்தில் அதற்கான புள்ளி விவரங்களை சேகரிக்க என்னால் முடியும், வன்னியர் உள்ஒதுக்கீடு பெறுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். எனவே போராட்டத்திற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். சமூக நீதி நாங்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் பச்சோந்திகள் வாய்திறக்கவில்லை, தந்தை பெரியார் வாரிசு என்று சொல்லிக்கொள்கிறவர்கள் எல்லாம் சமூகநீதி பேசுவதற்கு தகுதியற்றவர்கள். நம்முடைய வாழ்க்கையே போராட்டம் தான் இறுதியில் வெற்றி பெறுவோம் என்றார்.