எப்போதெல்லாம் அதிமுக தோற்கிறதோ அடுத்து பிரமாண்ட வெற்றிதான்... மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தாறுமாறு..!

By Asianet TamilFirst Published Sep 8, 2021, 8:03 PM IST
Highlights

எப்போதெல்லாம் அதிமுக தோல்வி அடைகிறதோ, அடுத்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார். “உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க திமுக முயற்சி செய்கிறது. இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டவர்கள், இன்று தேர்தலை தள்ளி வைக்கப் போராடுகிறார்கள். தற்போதைய திமுக ஆட்சி மக்களின் நன் மதிப்பை இழந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரத்தில் அவநம்பிக்கையை பெற்ற அரசு எதுவும் இல்லை.
திமுகவைப் போல தேர்தலைக் கண்டு அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல. எப்போது தேர்தல்  நடத்தினாலும் அதைத் துணிவோடு சந்திக்கும் இயக்கம் அதிமுக . வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் எங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். எப்போதெல்லாம் அதிமுக தோல்வி அடைகிறதோ, அடுத்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தேர்தல் நேரத்தில் 506 வாக்குறுதிகள் திமுக கொடுத்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு மனமில்லை.
கருணாநிதி ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்கள். 83 லட்சம் பேருக்கு நிலம் கொடுக்க வேண்டுமென்றால், 1 கோடியே 66 லட்சம் ஏக்கர் நிலம் தேவை. அன்று மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருணாநிதி செய்ததை, இன்று அவருடைய மகன் ஸ்டாலின் செய்துவருகிறார். கல்விக் கடன், நகைக்கடன், சிலிண்டர் மானியம் இவற்றில் அதிகாரம் இல்லாதபோது வாக்குறுதிகளை அளித்தது ஏன்? பெட்ரோல் விலையை மட்டும் குறைத்து, டீசல் விலை குறைப்பில் மக்களை ஸ்டாலின் அரசு ஏமாற்றிவிட்டது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களுக்காகத்தான் ஜெயலலிதா பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை திமுகவினர் மூடிவிட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏற்கனவே சீரழிந்து கிடக்கிறது. அதோடு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கிறார்களாம். படித்த பட்டதாரி மாணவர்களின் நலனுக்காக ரூ. 50 கோடி செலவில் 5 ஏக்கர் நிலத்தில் விழுப்புரத்தில் டைடல் பார்க் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. அதையும் புதுச்சேரி அருகே கொண்டு சென்றுவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு கிடைக்கும் வெற்றிதான் அதிமுகவின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கான படிகளாக இருக்கும். அதை உணர்த்து கட்சியினர் பணியாற்ற வேண்டும்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

click me!