காத்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம்... உடனடியாகப் பேரவையைக் கூட்ட அதிமுக முன்வருமா?

By Asianet TamilFirst Published Jun 5, 2019, 8:23 AM IST
Highlights

முன்பு அதிமுக - திமுக இடையே எம்.எல்.ஏ.க்கள் வித்தியாசம் அதிகமாக இருந்தது. தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள்தான் வித்தியாசம் உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 10 பேர் எதிர்த்து வாக்களித்துவிட்டாலோ சபையில் கலந்துகொள்ளாமல் போய்விட்டாலோ, ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். 
 

தமிழக சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை எப்போது கூட்டப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி முயற்சி செய்தது. ஆனால், சபாநாயகர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததால், அதைக் காரணம் காட்சி உச்ச நீதிமன்றத்தில் 3 எம்.எல்.ஏ.க்களும் தடை பெற்றுள்ளனர். இதனால், அந்த முயற்சி  தற்காலிகமாக தடைப்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. அதிமுகவுக்கு திரும்பும் முடிவுக்கு வந்துவிட்டார். இதற்கிடையே நம்பிக்கை இல்லா  தீர்மானத்தில் ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய ஷாக் அளிக்கும் வகையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வளைக்க திமுக முயற்சி செய்வதாக அரசியல் அரங்கில் தகவல்கள் உலாவந்துகொண்டிருக்கின்றன.


இதுபோன்ற பரபரப்பான தருணங்களுக்கு மத்தியில் சட்டப்பேரவை எப்போது கூட்டப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. 4 நாட்களுக்கு மட்டுமே நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துறை மீதான விவாதங்கள் நடைபெறவில்லை.

 
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், எப்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் இரண்டாவது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் கசிகின்றன. ஆனாலும், உடனடியாக சபையைக் கூட்ட ஆளும் தரப்பு முன்வருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் கட்சி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதேபோல சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவிக் கோரி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற சூழ்நிலையில் சபையை இப்போது கூட்டினால், முதல் தீர்மானமாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முன்பு அதிமுக - திமுக இடையே எம்.எல்.ஏ.க்கள் வித்தியாசம் அதிகமாக இருந்தது. தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள்தான் வித்தியாசம் உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 10 பேர் எதிர்த்து வாக்களித்துவிட்டாலோ சபையில் கலந்துகொள்ளாமல் போய்விட்டாலோ, ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். 
இதுபோன்ற ஒரு சங்கடம் இருப்பதால் அதிமுக உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முன்வராது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் யாராவது அதிருப்தியில் இருந்தால், அவர்களை சரி கட்டும் முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
வழக்கமாக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் பேரவையைக் கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி பார்த்தால், ஆகஸ்டு 13 வரை சபையைக் கூட்ட காலஅவகாசம் உள்ளது. அதனால், உடனடியாகச் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டாம் என்று ஆளும் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்குள்ளாக அதிருப்தியில் யாராவது இருந்தால், அவர்களை சரிகட்ட அவகாசமும் கிடைக்கும் என்பதால், உடனடியாக ஆளுங்கட்சி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

click me!