
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு;- தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து வருகிறேன். மழைக்காலம் விரைவில் வர உள்ளதால் அதற்கு முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்படும்.
முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது வரையிலும் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறிக்கையில், சில நகரங்கள் மாநகராட்சியாகவும், சில இடங்கள் நகராட்சியாகவும் தரம் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.