நான் சங்கிதான்.. இந்த சங்கிகள்தான் கிறிஸ்தவர்களுக்காக போராடுகிறார்கள்.. மீண்டும் மதுவந்தி.

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2021, 3:48 PM IST
Highlights

தற்போது இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஆனாலும் இவரை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை, ஒரு மதத்தையும், தேசியத்தையும், அதன் ஒருமைப்பாட்டையும் தவறாக பேசினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. 

மதத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழிவு படுத்தி பேசினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி ஆதங்கம் தெரிவித்துள்ளார். பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ்  பொன்னையாவுக்கு எதிராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையைச் சேர்ந்த சர்ச் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அப்பகுதியில் சர்ச் அமைக்க எதிர்ப்பு  தெரிவித்தவர்களை கண்டித்தும், பிரார்த்தனைக் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது எதிர்த்தும், சில அமைப்புகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அளித்த வாக்கில்தான் திமுக வெற்றி பெற்றதாகவும், திமுகவின் வெற்றி சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அதேபோல பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மிக இழிவாகப் பேசினார். அவரின் பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கலவரம் தூண்டும் வகையில் பேசிவது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரது பேச்சு  மத துவேஷம் செய்வதாக இருந்தது என்றும், வெறுப்பு பேச்சு பேசிய சர்ச் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் 38 மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஜார்ஜ் பொன்னையாவை  கண்டித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி, சர்ச் பாதர் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு மத கலவரத்தை உருவாக்குவது போல இருந்தது, என்றும், அவர் திமுகவையும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார், ஆனால் இதுவரை இதற்கு திமுகவினர் வாய்திறக்கவில்லை என்றார்.

தற்போது இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஆனாலும் இவரை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை, ஒரு மதத்தையும், தேசியத்தையும், அதன் ஒருமைப்பாட்டையும் தவறாக பேசினால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. மதத்தை வைத்து அரசியல் செய்கிற கட்சி பாஜக இல்லை எனக் கூறினார். நான் கேட்கிறேன் ஒருவரால் எப்படி ஒரு நாட்டின் மொத்த  மதத்தையும் அவமானப்படுத்த முடியும்? கிறிஸ்தவர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம், அவரும் கிறிஸ்தவர்களையும், பைபிளையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இப்போது சமூக வலைதள போராளிகள் எங்கே போனார்கள்? ஏன் இதை அவர்கள் கேள்வி எழுப்பவில்லை என்றார். எங்களை சங்கிகள் என்று கேலி செய்கிறார்கள், அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை, சங்கிகள் தான் கிறிஸ்தவர்களுக்காக போராடுகிறது என மதுவந்தி காட்டமாக கூறினார்.
 

click me!