
சொத்துக் குவிப்பு வழக்கும் 2ஜி வழக்கும்... கருணாநிதி அதையே சொல்லியிருப்பாரா...?
கடந்த 2015 ஆம் ஆண்டு... சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர்... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மோடி பிரதமர் ஆன ஒரு வருடத்தில்... சென்னை வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்றார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே ஜெயலலிதா அவருடன் நட்புறவு கொண்டிருந்தார் என்பதும், அவரது பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதையும் தேசிய அளவில் பேசப்பட்ட நிகழ்வுகள்.
இத்தகைய சூழலில் இக்கட்டான தருணங்களில் ஆதரவளித்து நட்புறவு பேணிய ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்தார் மோடி. அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட உணவை உண்டார். இவை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசப்பட்ட விஷயங்கள் என்ற போதிலும், அன்று மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவாறு அரசியலாக்கினார் திமுக., தலைவர் கருணாநிதி.
அது, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி குறித்து அதிகம் பேசப்பட்ட நேரம். அந்த நேரத்தில் ஜெயலலிதாவை பிரதமர் சந்திக்கலாமா என்றும், தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கலாமா என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் கருணாநிதி.
அப்போது அவர் கூறியவை....
சென்னை வந்த பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக் கு சென்று சந்தித்திருக்கிறார். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி ஏற்பட்டு விட்டது என்றும், பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்று கூடப் பேசி முடிவெடுக்கப்பட்டது என்றும் பல்வேறு ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சட்டசபைத் தேர்தலை முன்னிட்டே இந்த சந்திப்பு நடந்தது என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
ஆனால் பிரதமர் தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ எந்த விளக்கமும் இதுவரை கூறப்படவில்லை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தண்டிக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்தைக் காரணங்களின் அடிப்படையில் விடுதலை பெற்று, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது முறைதானா என்று ஒரு சிலர் சந்தேகப்படக் கூடும். உடல் நலம் சரியில்லாத ஜெயலலிதாவை மோடி சந்தித்தது அரசியல் நாகரிகம் என்று பா.ஜ.க.வின் தமிழ் மாநிலத் தலைவர் கூறிய போதிலும், உடல் நலம் இல்லாத போது விருந்து கொடுக்கவும், விருந்து அருந்தவும் என்பது பொருத்தமாக இருக்கிறதா? பாஜ கட்சியைச் சேர்ந்த பிரதமரோ, ஜெயலலிதா வீட்டிற்கே சென்று விருந்து அருந்துகிறார். இதில் உள்ள முரண்பாட்டின் அடிப்படையில் சிலர் சந்தேகிக்கக் கூடும்.
பிரதமர் மோடி, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டிற்கே சென்று மதிய விருந்தில் கலந்து கொண்டு விட்டு வரும்போது, ஜெயலலிதாவின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்ன அணுகுமுறையினை மேற்கொள்வார்களோ என்று ஒரு சிலர் சந்தேகம் கொள்ளக் கூடும். நியாயத்தின் அடிப்படையில் நீதிபதிகள் சுதந்திரமாகத் தீர்ப்பு கூறினால் கூட, அந்தத் தீர்ப்பு பிரதமரும், முதல்வரும் சந்தித்த காரணத்தால்தான் தீர்ப்பு அவ்வாறு கூறப்பட்டது என்றும் சிலர் சந்தேகிக்கக் கூடுமல்லவா? ...
- இப்போது, நேற்று அதே கருணாநிதியை, உடல் நலம் குன்றி வீட்டில் இருக்கும் கருணாநிதியை, 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கு கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் நிலையில், கருணாநிதி குடும்பத்தினர் வழக்கில் சிக்கி தண்டனை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அதே கருணாநிதியை, ஒரு பிரதமர் மோடி வந்து சந்தித்துச் சென்றதை நிச்சயம் அரசியல் ஆக்கக்கூடாது என்றுதான் நாம் சொல்லியாக வேண்டும். உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு தலைவரை நலம் விசாரிக்கத்தான் பிரதமர் வந்தார் என்று நாம் சொல்லியாக வேண்டும். இந்த சந்திப்பின் மூலம் திமுக., பாஜக., உறவு மலராது, கூட்டணி எல்லாம் நிச்சயம் இல்லை என்றுதான் நாம் சொல்லியாக வேண்டும்... பிரதமரின் இந்த சந்திப்பால் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நீட்டிக்கப்பட்டதில் எந்த தொடர்பும் இல்லை என்றுதான் நாம் சொல்லியாகவேண்டும்... அவ்வளவு ஏன்.. 2ஜி தீர்ப்பு கூட பாதிக்கபடாதா என்றும் நாம் கேள்வி கேட்டுவிட முடியாதுதான்...
காரணம் - இப்போது கருணாநிதியைப் போல் எதிர் அரசியல் செய்வார் யாரும் இல்லையே!