
முதலில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஆகாயத்தாமரையை பார்த்துவிட்டு அதை ஏன் அகற்றவில்லை என்பதை தெரிவித்துவிட்டு பிறகு அமெரிக்காவுடன் ஒப்பிட்டு பேச வேண்டும் என அமைச்சர் வேலுமணிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி ஏரியை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். ஸ்டாலினுடன் அத்தொகுதி எம்.எல்.ஏ சந்திரசேகர் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வேளச்சேரி ஏரியை சீரமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். வேளச்சேரி ஏரியை சீரமைப்பதற்காக 110 விதியை பயன்படுத்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, வேளச்சேரி ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்த தொகையும் ஏரிக்காக செலவு செய்யப்படவில்லை. ஏரியில் ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுகிறது. அவற்றை அகற்றுவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. முதலில் ஆகாயத்தாமரையை பார்த்துவிட்டு அதை ஏன் அகற்றவில்லை என்பதை தெரிவித்துவிட்டு பின்னர் அமைச்சர் வேலுமணி, அமெரிக்காவை பற்றி பேசட்டும் என்றார்.
தற்போதைய அரசு செய்யத்தவறிய அனைத்தையும் திமுக செய்யும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்தார்.