
சட்டசபையில் பேச தனக்கு அனுமதி அளிக்கப்பட்டால், விவசாயிகளின் பிரச்னை, கூடங்குளம் அணு உலை பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களுக்காக குரல் கொடுப்பேன் என தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவிற்கு சென்ற தினகரன், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசாமல், நீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டி தமிழக அரசு வஞ்சிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை கவனத்தில் கொள்ளாமல், கட்சியில் இருப்பவர்களை தக்கவைத்துக்கொள்ள முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அண்ணா வழிவந்த ஆட்சி நடக்கும் தமிழ்நாடு. மாநிலத்திற்கு ஆளுநரே தேவையில்லை என முழங்கிய அண்ணாவின் மாநிலமான தமிழ்நாட்டில், ஆளுநர் அதிகார வரம்பை மீறி ஆய்வு நடத்துகிறார்.
வரும் 8ம் தேதி முதன்முறையாக சட்டசபைக்கு செல்கிறேன். என்னை எந்த வரிசையில் உட்கார வைப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். சபாநாயகர் அனுமதி அளித்தால், எனது தொகுதியின் வளர்ச்சி திட்டங்கள், விவசாயிகளின் பிரச்னை, கூடங்குளம் அணு உலை பிரச்னை ஆகியவை குறித்து பேசுவேன். முதலில் என்னை பேச அனுமதிக்கிறார்களா என்பதை பார்ப்போம். அப்படி அனுமதி தராவிட்டால் அடுத்த கூட்டத்தில் அனுமதிக்காக காத்திருப்பேன் என தினகரன் தெரிவித்தார்.