
கேரள மாநிலத்தில் வயதான பெண்ணின் ஓய்வூதியத் தொகையில் இருந்து பெரும்பகுதியை கழித்துக்கொண்டு அலைகழிப்பு செய்த பாரத ஸ்டேட் வங்கி குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சேமிப்பு கணக்கில் மாதந்தோறும் வைத்து இருக்க வேண்டிய குறைந்த பட்ச இருப்புத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் பெருநகரங்களில் வசிப்போர் ரூ.5 ஆயிரம், சிறு நகரங்களில் ரூ. 3 ஆயிரம், குறு நகரங்களில் வசிப்போரு ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ. 100 வரை கடும் அபராதம் வசூலித்தது.
அதன்பின், வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியதையடுத்து, குறைந்த பட்ச இருப்பு தொகை அளவை ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ. ஆயிரம் என குறைத்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1,772 கோடியை எஸ்.பி.ஐ. வங்கி வசூலித்தது. இது அந்த வங்கியின் காலாண்டு லாபத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
பெரும் பாலும் இதுபோன்ற அபராதங்கள் நடுத்தர மக்கள், ஏழைமக்கள் வைத்திருக்கும் ேசமிப்பு கணக்குகள் மீதும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம், ஆழப்புழா நகரைச் சேர்ந்தவர் ஹமிதா பீவி. இவர் தென்னை நார்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர். இவருக்கு தென்நாவ் வாரியத்தில் இருந்து ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3,300 கிடைத்து வருகிறது. இவர் அந்த நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்
இந்நிலையில், ஹமிதா பீவிக்கு இந்த மாதம் ஓய்வூதியமாக ரூ.3,300 அவரின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. அதை எடுப்பதற்காக ஹமிதா பீவி சென்றபோது, அதில் ரூ.250 மட்டுமே இருந்துள்ளது. அது குறித்து வங்கி நிர்வாகிகளிடம் ஹமிதா பீவி கேட்டபோது, நீண்ட நாட்களாக, உங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்கவில்லை, அதனால், மொத்தமாகக் கணக்கிட்டு அபராதமாக ரூ.3,050 கழித்துவிட்டோம் என பதில் அளித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹமிதீ பிவி, தான் ஓய்வூதியம் பெறுபவள், கருணை காட்டுங்கள் என்று கூறியும், வங்கி நிர்வாகம் பணத்தை அளிக்க மறுத்துவிட்டது. இதனால், அவர் சோகத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
தான் ஓய்வூதியம் பெறுவோர், சிறுவர்கள், அரசின் மானியம் பெறும் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க தேவையில்லை என்ற விதிமுறை இருந்தபோதிலும், அதையும் மீறி எஸ்.பி.ஐ. வங்கி அபராதம் விதித்துள்ளது.
இந்த தகவலை கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.