எதை படிப்பது எதை விடுவது..? குழப்பத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்.. ஆசிரியர்கள் அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2020, 10:56 AM IST
Highlights

மேலும் இந்த நெருக்கடியான சூழலில்  மாணவர்களின் மனநிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
 

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட 40 சதவீத பாடங்கள் எவை எவையென்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின் வருமாறு:  

கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக 2020-21 ஆம் கல்விஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. உயிரா படிப்பா என்றால் உயிர்தான் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்ற  அடிப்படையில் மாற்று ஏற்பாடாக கற்றல் பணி பாதிக்கப்படாத வகையில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் எடுக்கப்பட்டுவருவது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. 

மேலும் இந்த நெருக்கடியான சூழலில்  மாணவர்களின் மனநிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் குறைக்கப்பட்டப் பாடங்கள் எவை எவையென்று இதுவரை அறிவிக்கப்படாததால் எதை படிப்பது என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். எனவே எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை மாணவர்களின் நலன்கருதி வெளியிட வேண்டும். 

எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியத் தேர்வு என்பதாலும், அகில இந்திய அளலில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவர்கள் தங்களை நம்பிக்கையுடன் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த கல்வியாண்டிற்கானப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கான குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்களை வெளியிட்டு உதவிட ஆவனசெய்யும்படி  மாண்புமிகு முதல்வர்அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!