
தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூற இருப்பதாகவும் இதனால் இரு அமைச்சர்கள் பதவி விலக நேரிடும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஊழல் புகாரை ஜூன் 3 அல்லது 4-ஆம் தேதியில் கூறுவேன் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்லில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறுவதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை.
திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. முதலில் அவர் அவருடைய முதுகை திரும்பிப் பார்க்கட்டும். பின்னர் அடுத்தவர் பற்றி குறை கூற வரலாம். ஊழல் குற்றச்சாட்டு என்று சொல்வதற்கு அண்ணாமலைக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றால், விசாரணையின் முடிவில் நீதிமன்றம்தன் அதை முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் பாஜக தலைவர்கள் திமுகவை அதிகம் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உடனே உயர் பதவி கிடைக்கும். இதற்கு தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகனும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் ஓர் உதாரணம்.
எனவே தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் மத்திய அரசில் ஏதேனும் பதவி வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த காரணத்தால் 4 இடங்களைப் பெற்றது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினரால் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?’’ என்று பெரியசாமி கேள்வி எழுப்பினார்.