நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன..? நாள் குறித்த டாக்டர் ராமதாஸ்.!

By Asianet TamilFirst Published Oct 12, 2021, 8:36 AM IST
Highlights

 தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எடுக்கப்போகும் நிலைப்பாடு குறித்து பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
 

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என இரு தேர்தல்களில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. இந்த இரு தேர்தலிலுமே பாமக தோல்வியைத்தான் சந்தித்தது, இருந்தபோதும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே பாமக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியிலிருந்து கழன்று, தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டி’ என்று பேசினார்.


டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பாமக, அக்கட்சியின் சிறப்பு இணைய வழி பொதுக்குழு கூட்டத்தை அக்டோபர் 16 அன்று கூட்டுகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் குறித்து பாமக விவாதிக்க உள்ளது. மேலும் இந்தத் தேர்தலில் பாமக பெறும் வாக்குகளை வைத்து எதிர்கால அரசியல் குறித்து முடிவை பாமக எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் எதிர்பார்த்த வெற்றியையோ வாக்கு சதவீதத்தையோ பாமக பெற்றால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை அறிவிக்கவும் பாமக முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. மாறாக முடிவுகள் அமைந்தால், கூட்டணி குறித்து அக்கட்சி விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க பாமக இப்போதே தாயாராகி வருகிறது.
 

click me!