அதிமுக பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்க துடிக்கும் திமுக – பாஜக..! ஆளுநர் முடிவு என்ன?

By Selva KathirFirst Published Oct 27, 2020, 9:33 AM IST
Highlights

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதக்கீடு என்கிற எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளானுக்கு ஆளுநர் செக் வைத்த நிலையில் தற்போது அந்த பிளானை தங்களுக்கு சாதகமாக மாற்ற திமுக மட்டும் அல்ல பாஜகவும் களம் இறங்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதக்கீடு என்கிற எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளானுக்கு ஆளுநர் செக் வைத்த நிலையில் தற்போது அந்த பிளானை தங்களுக்கு சாதகமாக மாற்ற திமுக மட்டும் அல்ல பாஜகவும் களம் இறங்கியுள்ளது.

நீட் தேர்வு தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தேர்வால் தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவது குதிரைக் கொம்பாகியுள்ளது. அரசுப் பள்ளிமாணவர்களுக்க நீட் பிரத்யேக பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அது பெரிய அளவில் கை குடுக்கவில்லை. இந்த ஆண்டும் கூட அரசுப் பள்ளியில் பயின்றாலும் தனியார் கோச்சிங் சென்டர் சென்று பயின்ற ஒரு சிலர் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்வதற்கான தேவையான கட் ஆப் மதிப்பெண்ணுடன் நீட் தேர்வில் வென்றுள்ளனர்.

இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமி அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டது. அதன்படி நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது தான். இதற்காக நீதிபதி கலையரசன் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு எம்பிபிஎஸ் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. இதன் மூலம் சுமார் 500 அரசுப் பள்ளி மாணவர்கள் ஆண்டு தோறும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த பரிந்துரையை தமிழக அரசு அப்படியே ஏற்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7 புள்ளி ஐந்து சதவித உள்ஒதுக்கீட்டிற்காக சட்டம் இயற்றியது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் அடையும் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அமல்படுத்த முடியாது. இதனால் சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிறகு அமைச்சர்கள் ஐந்து பேரும் ஆளுநரை சேரில் சந்தித்து சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர்.

ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அனுமதிக்காத விவகாரத்தை டெல்லி எழுப்பியதாக கூறுகிறார்கள். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வருமானச் சான்றிதழ் வழங்குவதையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு கிடைப்பது கேள்விக்குறியானது. ஆனால் இந்த விவகாரம் தற்போது அரசியலாகிவிட்டது.

தவிர பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சில உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த ஒப்புதலை பெற்றுக் கொடுத்தது தாங்கள் தான் என்று விளம்பரம் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் களம் இறங்கியுள்ளன. இந்த கட்சிகளில் முன்னணியில் உள்ளது திமுக தான்.

ஆளுநரிடம் சட்டம் ஒப்புதலுக்கு சென்ற நிலையில் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு அவருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பினார். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தால் அதற்கு தான் எழுதிய கடிதம் தான் காரணம் எனறு விளம்பரம் செய்ய ஸ்டாலின் தயாராகினார். அதே சமயம் எதிர்ப்பை காட்டும் வகையில் கடந்த வாரம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டமும் நடத்தியது. இதற்கும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்க தயாராகிவிட்டார் என்று திமுகவிற்கு டெல்லியில் இருந்து கிடைத்த தகவல் தான் காரணம் என்றார்கள்.

இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக ஆளுநர் பிறப்பிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்-முருகன் வலியுறுத்தினார். இதே போன்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனும் ஆளுநர், இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தர வேண்டும், இல்லை என்றால் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கில் குழப்பம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அத்தோடு இந்த செய்தியை போடுமாறு அனைத்து தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்கள், எடிட்டர்களை தொடர்பு கொண்டு கெஞ்சாத குறையாக கே.டி.ராகவன் கேட்டதாக கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஆளுநர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அதற்கு நாங்கள் தான் காரணம் என்று இவர்கள் கூறிக் கொள்ளத்தான் என்கிறார்கள். எது எப்படியோ எடப்பாடிபழனிசாமி பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்க திமுகவும், பாஜகவும் போட்டி போடுகிறார்கள். இதனைத் தான் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

click me!