பேசிய பேச்சு என்ன.. ஆடிய ஆட்டம் என்ன.!! பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி.. அறிவுரை கழகம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2021, 4:04 PM IST
Highlights

பின்னர் அது தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வளாகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடைபெற்று வந்தது. அதில் மதன் கடந்த 6ஆம் தேதி அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

யூடியூபில் சிறுவர்-சிறுமிகளிடத்தில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்த பப்ஜீ மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது. தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர் கோரி வந்த நிலையில் அவர் மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஜ்ஜி என்ற விளையாட்டின் மூலம் சிறுவர்-சிறுமிகளை இணையதளம் வாயிலாக குழுவாக சேர்த்து அவர்களிடம் மிகவும் ஆபாசமாக பேசி அவர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்தவர் மதன் என்கிற பப்ஜி மதன். இவரை கைது செய்ய வேண்டும் என ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்ததை அடுத்து. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

பின்னர் தலைமறைவாக இருந்த அவரை கடந்த ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர் வைத்திருந்த இரண்டு சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டார், பின்னர் கைக் குழந்தையை காரணம் காட்டி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பணத்திற்காக பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்-சிறுமிகள் மத்தியில் விஷத்தை விதைத்து வந்த பஜ்ஜி மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர், சங்கர் ஜிவால், பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனையடுத்து அவர் மீது குண்டர்சட்டம்பாய்ந்தது. 

பின்னர் அது தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வளாகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடைபெற்று வந்தது. அதில் மதன் கடந்த 6ஆம் தேதி அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் தான் விளையாடவில்லை  எனவும், இந்த விளையாட்டின் மூலம் தான்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எனவே தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரின் வாதத்தை ஏற்க மறுத்த அறிவுரைக் கழகம், மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லும் எனக் கூறி குண்டர் சட்டத்தை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே மதன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த மனு மீது தமிழக அரசும் சென்னை மாநகர ஆணையரும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!