தினகரன் கட்சி படு தோல்விக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் தகவல்களை தலைமைக்கு அனுப்பும் அமமுக நிர்வாகிகள்!!

By sathish kFirst Published May 27, 2019, 1:05 PM IST
Highlights

அதிமுக, திமுகவிற்கு இணையான பலமான வேட்பாளர்களை களமிறங்கிய தினகரன் கட்சிக்கு பரிதாப தோல்வி கிடைத்துள்ளது. இந்த தோல்வி குறித்து தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் குறித்த பல தகவல்களை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
 

அதிமுக, திமுகவிற்கு இணையான பலமான வேட்பாளர்களை களமிறங்கிய தினகரன் கட்சிக்கு பரிதாப தோல்வி கிடைத்துள்ளது. இந்த தோல்வி குறித்து தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் குறித்த பல தகவல்களை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

அதிமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்த தினகரன், காலியாக இருந்த 22  தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக, பலமான வேட்பாளர்களை களமிறக்கியிருந்தார் தினகரன்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சியைப் போலவே அவர்களுக்கு சரிசமமாகத் தான் தேர்தல் பணியாற்றினார்கள் அமமுகவினர். பண விவகாரத்திலும் ஆளுங்கட்சி கொடுத்ததை விட அதிகமாகவே சில தொகுதிகளில் கொடுத்தனர். எப்படியும் அதிமுகவிற்கு ஆட்டம் காட்டும் என சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவை தலைகீழாக மாறியுள்ளது.

ஒரு தொகுதியில் கூட முன்னிலைக்கு வரவில்லை, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவிய அமமுக வெறும் 22.25 லட்சம் வாக்குகளைக் கைப்பற்றி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 

ஆனால், இவ்வளவு குறைந்த வாக்குகளைப் பெறுவோம் என்று எதிர்பார்க்காத தினகரன், மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக தினகரன், அவரது உதவியாளர்கள் மல்லி என்ற மல்லி கிருஷ்ணா, ஜனா, பிரவின் உட்பட ஒரு டீம் தீவிரமான ஆலோசனையில் இறங்கியுள்ளது.

தினகரன் உதவியாளர்களில் ஒருவரான பிரவின் தமிழகம் முழுவதுமுள்ள அமமுக மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ரிசல்ட், பூத் முகவர், பொது முகவர், டம்மி வேட்பாளர், அவரது முகவர் பட்டியல்கள், பூத் வாரியாக அமமுக பெற்றுள்ள வாக்குகளை உடனடியாக ஆன் லைனில் தலைமைக்கு அனுப்பச் சொல்லியுள்ளார். இந்த அதிரடி உத்தரவால் இரவோடு இரவாக தமிழகம் முழுவதிலுமிருந்து தலைமைக்கு அறிக்கை அனுப்பி வருகிறார்கள் நிர்வாகிகள்.

நிர்வாகிகளிடமிருந்த வந்த அந்த அறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில்,பரிசு பெட்டி சின்னம் சுயேச்சை என்பதால் இரண்டாவது, மூன்றாவது வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டதால் வாக்காளர்களால் தேட முடியவில்லை.வயதானவர்களுக்குப் பரிசு பெட்டிச் சின்னம் அயன் பாக்ஸ் போல் தெரிந்துள்ளதால் வேறு சின்னத்திற்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். 

பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று பேசியது பின்னடைவாக அமைந்தது. நமக்கு வாக்களிக்க இருந்த பலர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.  

அதுமட்டுமல்ல, வயசானவர்களுக்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் போட்டோ போட்டு வாக்கு கேட்டதால், வேட்பாளர்கள் ஏற்கனவே இரட்டை இலைக்கு கேட்டு வந்ததாலும் இப்போது அவர்கள் இரட்டை இலைக்கே வாக்களித்துள்ளனர்.

இதே போல பல அதிர்ச்சியான தகவல்கள் வரும் ஜூன் 1ஆம் தேதி நடத்தப்பட உள்ள ஆலோசனையில் இன்னும் பல விவகாரங்கள் வெளிப்படலாம் என்று கூறுகிறார்கள்.

click me!