‘ரொம்ப இழந்துட்டோம்யா. இனி அது கூடாது. நீங்கதானே ஒருங்கிணைப்பாளர். சசிகலாவையும், தினகரனையும் உடனே கட்சியில இணையுங்க’
‘இன்னும் பத்து நாட்களில் அ.தி.மு.க. சசிகலாவின் வசம் வரும். இரட்டைத் தலைமை என்பது இரட்டை குழல் துப்பாக்கியல்ல. அது வெறும் தீபாவளி துப்பாக்கிதான். தேர்தல் தோல்விக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.தான் காரணம்.’ இப்படி சொன்னது சாட்ஸாத் பன்னீர்செல்வத்தின் தம்பியான ராஜாதான். அ.தி.மு.க.வில் இருக்கும் ஏதோ ஒரு பன்னீர்செல்வத்தின் தம்பியல்ல, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தின் தம்பிதான்.
அதாவது சசிகலாவை சந்தித்த காரணத்திற்காக அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. தம்பியென்றும் பாராமல் தன்னுடன் சேர்ந்து அவர் மீது பன்னீர் நடவடிக்கை எடுத்துள்ளாரே! என்று எடப்பாடியார் அண்ட்கோ சந்தோஷம் படும் நிலையில், பன்னீரின் சொந்த மாவட்டமான தேனியிலிருந்து எடப்பாடியாரை நோக்கி எடக்குமடக்கான விமர்சனங்கள் வந்து விழுகின்றன.
அவர்கள் எடுத்து வைக்கும் விஷயங்கள் இதுதான் “அப்பு எடப்பாடியாரே, என்னமோ பன்னீருக்கே தெரியாமதான் ராஜா அங்குட்டு அந்தம்மாவ பார்க்க போனாருன்னு நீங்க நினைக்காதீக. எல்லாம் தலைவர் பன்னீருக்கு தெரியும்.
ஒரு விஷயம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் போன புதன் கிழமையன்னைக்கு டெல்லியில அமித்ஷாவை சந்திக்க நீங்க டைம் கேட்டதாக பன்னீருக்கு ஒரு போன் வந்துச்சு. உடனே கொதிச்சுப்போனவரு சில உத்தரவுகளைப் போட்டாரு. அதன்படி தேனி பெரியகுளம் கைலாசப்பட்டியிலுள்ள அவரோட பண்ணை வீட்டுக்கு தேனி மாவட்ட நகரம், ஒன்றியம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளை வரச்சொன்னாரு. அவசர அவசரமா ஒரு கூட்டம் போட்டாய்ங்க. அதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகிட்டாய்ங்க. அப்ப முன்னாள் எம்.பி. பார்த்திபன் ‘ரொம்ப இழந்துட்டோம்யா. இனி அது கூடாது. நீங்கதானே ஒருங்கிணைப்பாளர். சசிகலாவையும், தினகரனையும் உடனே கட்சியில இணையுங்க.’ன்னு சொன்னார். அடுத்து பேசிய மாவட்ட செயலாளர் சையது கானும் இதையே சொன்னார்.
இதைக்கேட்டுட்டு ஆவேசமாக பன்னீர் எழுந்து, ‘என்னது நம்ம கட்சிக்குள் சசிகலா, டிடிவியா? என்கிட்டேயே அதை சொல்ல என்னா தைரியம் உங்களுக்கு இருக்கணும்’ன்னு கேட்டிருப்பார்னு நீங்க நினைச்சா அது பெரிய தப்பு. அவரு சொன்னது இதுதான் அந்த, “இப்போ நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் பல தடவை அவங்கட்ட (எடப்பாடி டீமிடம்) சொல்லிட்டேன். அவங்க யாரும் இதை காதுல போட்டுக்கிறதா இல்லை. தி.மு.க. ஒண்ணும் வெற்றி பெறலை, நாம சிதறியதால் தோற்றுப் போனோம் அவ்வளவேன்னு சொன்னாலும் கேக்குற ரகமில்லைய்யா அவங்க.” அப்படின்னுதான் சொன்னார். இதுக்கு பிறகு அந்த நிர்வாகிகள் ‘சசிகலா மற்றும் தினகரனை கட்சிக்குள் இணைக்க சொல்லி அவரசர கூட்டம் போட்டு தீர்மானம் போடப்போறோம்’னு சொன்னதுக்கும், சிரிச்சுட்டே கிளம்பிட்டார். ஆக சசி மற்றும் தினகரனை அ.தி.மு.க.வினுள் இழுத்து அழகு பார்க்கணும் அப்படிங்கிறதுதான் அவரோட எண்ணமே.
இப்ப ராஜா சந்திப்பு, அதுக்கு நீங்க காட்டிய ரியாக்ஷன் எல்லாமே பன்னீரை பொறுத்த வரைக்கும் சும்மா. ராஜாவை நீக்குன உங்களால அதுக்கு பின்னாடி இருக்குற பன்னீரை என்ன பண்ண முடியும்?” என்று அத்தனையையும் விவரித்து, தெனாவெட்டாக கேள்வி கேட்கின்றனர் அவரது கவனத்துக்கு போகும் வண்ணம் சோஷியல் மீடியாக்கள் வழியே.
உண்மையில் விழி பிதுங்கிதான் நிற்கிறார் எடப்பாடியார்..!